Friday, December 17, 2010

திண்ணை

      திண்ணை இருக்கும் வீடு அழகானது . ஓட்டமாய் ஓடும் வாழ்வின் அயர்ச்சி தாங்கும் பகுதி. நீண்ட ஊதாங்குழல் போல , வேலைப்பாடு குறைவாகக் கொண்ட தூண்களையுடைய திண்ணை பொதுவானது. இதில் பொலிவு சேர்த்துச் செல்வாக்கைக் காட்டுவதும் உண்டு. "பாப்பார் ஊட்டுத் திண்ணை மாதிரி " என்பது நன்கு பராமரிக்கப் படும் வீட்டுப் பொருள்களைக் குறிப்பது. எனவே மற்றவர் திண்ணை அழுக்காகத்தான் இருக்க வேண்டும்.

     அறிமுகம் இல்லாதவரை உட்கார வைக்க, வழிப்போக்கர் ஆசுவாசப் படுத்திக் கொள்ள, ஆண்பிள்ளைகள் ஊர்க்கதை பேச, குழு சேர்த்துச் சீட்டாட, தலைக்குடத் தண்ணீரை இடுப்புக்கு மாற்றி வைக்க, ராசியான ஓட்டாஞ்சில்லை ஒளித்து வைக்க, பால் கணக்கு எழுத, வயசாளிகளின் வசிப்பிடமாக- எனப் பல பயன்பாடுகள் உண்டு.

     அரசியல் வல்லாரின் பரிந்துரையில் ஒதுக்கிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கு மாறப் போகிறோம் என்ற தகவல் கேட்டதும் என்னைப் பெற்ற அப்பன் சொன்னது: "அங்க திண்ணை இருக்காடா ?"

      மறக்க முடியாத் திண்ணை ஒன்றுண்டு. புத்தகப் பையைத் தூணில் சாய்த்து , உள்ளே சென்ற நண்பன் வரும் வரை காத்திருந்த திண்ணை அது. அவன் பெற்றோர் மசப்பயலுகளாக இருந்தால் உள்ளே செல்ல, நடமாட அனுமதி கிடைக்கும். அப்போதும் "காலக் கழுவலீங்க" என்ற தற்காப்பையும் பயன்படுத்தி விட்டுத்தான் தயங்கிக் கொண்டே உள்ளே பிரவேசம். "பின்னால சிமிட்டித் தொட்டியில இருக்கு பார்ரா" என்ற குரல் அங்கீகாரம். கறுப்புக் காப்பி கூடக் கிடைக்கலாம்-அவர்கள் குடிக்கும் டம்ளரிலேயே. சத்தமே இல்லையெனில் நாளைக்குப் பாக்கலாம் -எனத் தலை நீட்டும் நண்பனின் அபிநயம் கண்டு புத்தகப் பை தூக்கி அப்படியே திரும்பி விட வேண்டியதுதான்- திண்ணையோடு.