Friday, November 1, 2013

..திருச்சியில் கவியரங்கம்..

  ..`கோவை வானொலியின் சார்பாகக் கவியரங்க நிகழ்ச்சி நடக்கப் போகிறது '- என்ற செய்தியே எங்களுக்கு மகிழ்வலைகளை  ஏற்படுத்தி விடும்.பங்கேற்பாளர்கள் பட்டியல் , நிகழ்ச்சிகளுக்கிடையே வாசிக்கப்படும்போது அந்த அலைகள் இன்னும் வேகமாக அடிக்க ஆரம்பித்து விடும். மூத்த கவிஞர்கள்  புவியரசு,  சிற்பி, தமிழன்பன் , சக்திக்கனல், சிதம்பரநாதன் , பாலா, தேனரசன், தாராபாரதி போன்றோர் எமக்கு மேடைக் கவிதை முன்னோடிகள்.இவர்களில் யாரோ ஒருவரின் பாதிப்பு எங்கள் வாசிப்பில் தன்னியல்பாகவே பின்னாளில் வந்து சேர்ந்ததில் வியப்பில்லை.

    மணி மேல்நிலைப் பள்ளி நானி பல்கிவாலா கலையரங்கத்தில்தான் பொதுவாகக் கவியரங்க நிகழ்ச்சிகள் நடக்கும்.( அங்கு தொடர்ந்து நடந்துவரும் இன்னொரு நிகழ்வு கம்பன் விழா ). வானொலி ஜாம்பவான்கள் ஜே.கமலநாதன், வி.வி.சுப்ரமணியன், எஸ்.எஸ்.ராஜன் ஆகியோர் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருப்பார்கள். நெய்வேலி இலக்கியச் சிந்தனை போன்ற அமைப்புகளுடன் இணைந்தும் வானொலி  நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது.

  27A பஸ்சைப் பிடித்துக் காந்திபுரம் போய் அங்கிருந்து இன்னொன்றில் ஏறி மணி மேல்நிலைப்பள்ளி நிறுத்தத்தில்  இறங்கி அரங்கில் நுழையும்போது   ஏதோ சொந்தக்காரர்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்ததுபோல இருக்கும்.கமல், திரிபுரசுந்தரி அக்கா,சூலூர் கணேஷ்  என வானொலிக் குயில்கள் வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருக்கும்.

  நாம்தான் முதலில் வந்ததாக்கும் எனப் பெருமிதமாக ஒரு கணக்குப் போட்டு  இருக்கை  பார்த்து அமரப்போனால் அரங்கின் கிழமூலையில் இருந்து கவிஞர் கே.ஆர்.பாபு கையசைப்பார்.அருகில்தான் அவருக்கு வீடு.தனது புல்லட்டில் (பழைய சைக்கிள்தான்) முன்னதாகவே வந்திருப்பார் என யூகித்து முடிக்கும் முன்பாகவே முன்வரிசையில் உமாமகேசுவரி தனது அம்மா -எங்கள் ஜானகி அம்மாவுடன் அமர்ந்திருப்பது தெரியும்.மென்சிரிப்புடன் நலம் விசாரித்துவிட்டு  நிகழ்வில் மூழ்கிப் போவார்.

  சற்றே திரும்பிப்பார்த்தால் கவிஞன்  பழ.சந்திரசேகரனின் தலை தெரியும். நாங்களாவது உள்ளூர் . அவன் திருப்பூரைத் தாண்டி பூச்சக்காட்டுப் புதூரில் இருந்து வரவேண்டும்.கவியரங்கம் என்றால் தவறாமல் வந்துவிடுவான். தலைமைக் கவிஞர் தனது கவிதையை வாசிக்கத் தொடங்கும்போது மேற்புறக் கதவைத் திறந்துகொண்டு  தென்றல் ராஜேந்திரன்  உள்ளே வந்து அமர இடம் தேடிக்கொண்டிருப்பது தெரியும். பங்க்சுவல் பரமானந்தம் அவர்.சரியான நேரத்தில்தான் வந்து நிற்பார். இன்னொரு ப.ப இருக்கிறார். அவர் கவிஞர் சூசன். நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது தென்படுவார். `நீங்க எல்லாரும் வரும்போதே பார்த்தேன்'-எனத் திகில்செய்தியை வாசிப்பார். சி.ஐ.டி யாகப் போயிருக்க வேண்டியவர் .

  வாசித்த கவிஞர்களை நேரில் பார்த்து சிறு நலம் விசாரிப்பும் , பாராட்டும் தெரிவித்துவிட்டு வெளியே வரும் எம் குழு நேராகச் செல்லுமிடம் மகளிர் பாலிடெக்னிக் மூலையில் உள்ள டீக்கடை.ப.வடை, உ.வடையுடனான அந்தக் கடையின் தேநீர் கவியரங்க நிகழ்ச்சிக்கு முன்னும்,பின்னுமான செய்திகளை எங்கள் மூலம் கேட்டுக்கொண்டிருக்கும்.அந்தச் சங்கமம் கவியரங்கம் போன்றதொரு கூடலரங்கம்.

  எங்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் அந்தரங்க ஆசை இருந்தது.புத்தாண்டு, பொங்கல், தீபாவளி சிறப்புக் கவியரங்கில் பங்கேற்க வேண்டும்.ஊருக்குப் பெருமை தேடித் தரவேண்டும்.நாமாக இருந்தால் கவிதையை இப்படித்தான் தொடங்கியிருப்போம் என்றெல்லாம் எண்ணம் விரியும்.ஒவ்வொருவருக்கும் அது நிறைவேறிக் கொண்டும் இருந்தது.

  எனது நாள் வந்தது. வானொலியிலிருந்து வந்திருந்த அழைப்புக் கடிதத்தை எடுத்துப் போனேன்.துணை இயக்குனர் ஜே.கமலநாதன் வரவேற்றார்.`திருச்சியில்  தமிழ்ப்புத்தாண்டுக் கவியரங்கம் நடக்கிறது. கோவை வானொலியின் சார்பாக நீங்கள்  பங்கேற்கிறீர்கள்.வாழ்த்துகள் என்றார்.`புத்தாண்டுச் சிந்தனைகள்' என்பது பொதுத்தலைப்பு.`குழந்தைத் தொழிலாளிகள் ' -எனக்கானது. மகிழ்ந்தது மனம்.

  தொடர்புடைய தகவல்கள், புள்ளிவிவரங்கள் எனக் கொஞ்சம் திரட்டிக் கொண்டேன்.நான்கு நாள்களில் கவிதையும் தயாரானது. வாசித்துப் பார்த்து 5 நிமிடங்கள் வரும் வகையில் வரம்புகட்டி எடுத்துப் போனேன். அமைதியாகப் படித்து முடித்ததும் கமல் சொன்னார் : `இப்படியே இருக்கட்டும். எதையும் நீக்கிவிட வேண்டாம்.தொடக்கம்,முடிவுக்காக இன்னும் ஒரு நிமிடம் வருகிறமாதிரி புதிதாய் எழுதிக் கொள்ளுங்கள். போதும் ' என்றார்.திருச்சியில் சாரதா லாட்ஜ் வசதியாக இருக்கும்.பொய் வாருங்கள் என வாழ்த்தி அனுப்பினார்.

  நானும் காளிதாசனும் திருச்சிக்குக் கிளம்பினோம்.பேருந்து நிலையம் அருகிலேயே இருந்தது சாரதா. காலையில் வண்டி வந்து அழைத்துப் போனது.நிலையத்தில்  இயக்குனர் கணேசன் ( கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் ) , தமிழ்வாணன் ஆகியோரைச் சந்தித்தோம்.

  ம.வே.பசுபதி அந்தக் கவியரங்கின் தலைவர்.பழுப்புநிறத் தோல்பை ஒன்றை வைத்திருந்தார்.அருகிலேயே ஒரு மஞ்சள் பை.தோல் பையிலிருந்து எழுதப்பட்ட காகிதங்களையும் , மஞ்சள் பையிலிருந்து வெற்றிலைப் பெட்டியையும் எடுத்து வெளியே வைத்தார். சைவப் பேராதீனங்களில் பயின்றவர்.திருப்பனந்தாள் மடத்தின் ஆஸ்தானப் புலவர்.வெற்றிலையைக் குதப்பிக் கொண்டேயிருந்த  வாய் ஒரு சொல் குழறாமல் தமிழ் பேசியது.

  அறிமுகப் படுத்திகொண்டோம்.ஒவ்வொருவரின் பெயரையும், எந்த நிலையத்திலிருந்து கலந்துகொள்கிறோம் என்பதையும் ஒரு தனிக் காகிதத்தில் குறித்துக் கொண்டார். பங்கேற்பாளர்களில் இப்போது  நினைவுக்கு வருபவர்கள் தாராபாரதியும், இரா.நடராசனும்.தா.பாரதியின் கவிதைகளை எங்கள் ஊர் வானொலியிலும் ,நானி கலையரங்கில் நேரிலும் வாசிக்கக் கேட்டிருக்கிறேன்.அவரின்,
             வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
             விரல்கள் பத்தும் மூலதனம்
                  -எனும் வரிகள் புகழ்வாய்ந்தவை.ஒல்லியான உடலில் வெள்ளைச் சட்டையும்,வேட்டியும் ஒட்டிக் கொண்டிருப்பதுபோலத் தெரியும் அவருக்கு.அண்மையில் மறைந்துபோனார்.

  இரா.நடராசன் பள்ளி ஆசிரியர்.` கருப்பு யுத்தம்' என்றொரு கவிதை நூல் எழுதியிருந்தார்.பின்னாளில் அவரின் `ஆயிஷா' சிறுகதையாகவும்,குறும்படமாகவும் வெளிவந்து நீடித்த புகழைத் தேடித்தந்தது.

  கவிதைகளைத் தலைவருக்கு வாசித்துக் காட்டினோம்.தலையசைத்தும், புன்சிரிப்பை உதிர்த்தும் ரசித்தார்.வெற்றிலை,சீவல் தீராச் சுனையாக பெட்டியிலிருந்து வழிந்து கொண்டிருந்தது.பரவியிருந்த காகிதங்களைச்   சேகரித்தவாறே  என்னைப் பார்த்துச் சொன்னார்.` நீங்கதான் முதல்ல வாசிக்கணும்...சரிதானே..?' தோன்றிய  படபடப்பும் வியப்பும், மகிழ்ச்சியாக மாறத் தொடங்கியது.

  திருச்சி பெல் தொழிற்சாலை அரங்கில் நேயர்கள் முன்னிலையில் கவியரங்க நிகழ்ச்சி.ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தார் தலைவர்.எழுதிய காகிதங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.சரிதான்..தொடக்கம் எங்கே..? புதிதாய்,ஒரு நிமிடம் வருகிறமாதிரி என்றெல்லாம் கமல் படித்துப் படித்துச் சொன்னாரே.. அப்புறமாய்ப் பார்த்துக் கொள்ளலாம் என இருந்தாகிவிட்டதே. என்ன செய்வது என யோசித்தேன்.இனி புதிதாய் எழுதினால் சரியாக வருமா .. கவிதைக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லாமல் போய்விட்டால் ..என்றெல்லாம் மனம் அடித்துக் கொண்டது.

  தலைமைக் கவிதையை வாசிக்க ஆரம்பித்தார் தலைவர் .நைசாக நழுவினேன். அரங்கின் பின்புறமிருந்த கழிவறைக்கு ஓடினேன். அவசர அவசரமாக எழுதத் தொடங்கினேன். வாசித்துப் பார்த்தேன்.கொஞ்சம் மாற்றினேன்.கொஞ்சம் அடித்துத் திருத்தினேன்.பிறகு ஓட்டமும் நடையுமாக அரங்கில் நுழைய ..'முதல் கவிஞரை அழைப்போம்..எங்கே அவர்..?' எனத் தலைவர் தேட ஆரம்பித்து விட்டார்.நேராக ஒலிவாங்கி மேடைக்குச் சென்று அங்கிருந்த குவளையில் இருந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தேன்.பார்வையாளர்களின் முன் வரிசையில்  இருந்து காளிதாசன் முறைப்பது தெரிந்தது.`.என்னப்பா...கவிஞருக்கே .படபடப்பா..?' என்ற தலைவரின் குரலைச் சிரித்து ஆமோதித்துப பார்வையாளர்கள் மீதும் அதே சிரிப்பைத் தெளித்துவிட்டுத் தொடங்கினேன் இப்படி :

    `..ஒட்டகங்களுக்கான
       ஓட்டப்பந்தயம் நடக்கும்
       மைதானமாக  மாறிக்கொண்டிருக்கும்
       காவிரியின் கரைக்குக் -
       கொஞ்சம் ஆறுதலாய்ச்
       சிறுவாணித் தண்ணீரைக்
       கோவையிலிருந்து
       கொண்டு வந்திருக்கிறேன்..'
         
           - அரங்கில் கைத்தட்டல் ஆரம்பித்துவிட்டது.இனி என்ன கவலை.. ஒவ்வொரு வார்த்தையையும் நிதானித்து வாசித்தேன்.  குழந்தைகளிடமிருந்து காணாமல் போய்க்கொண்டிருக்கும் குழந்தைமை , வறுமை காரணமாகக் கல்வி துறந்து வேலைக்குப் போவது , விளையாட்டுகளை மறப்பது எனத் தொடங்கிப் பெற்றோர்  கடமைகள், கல்வியின் மேன்மை எனப் பலவற்றைக் கவிதையில் சொன்னேன். வாசித்து முடிந்ததும் நீண்ட கைத்தட்டல்.

     கனவு நிறைவேறியது. பாராட்டுகளை ஏற்றுக் கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து  காளிதாசன் மறக்காமல் கேட்டான்.'எப்பவும் நீங்க இப்படித்தான் பண்றீங்க..அந்தச் சின்ன கேப்ல எங்கதான் போனீங்க ..சிகரெட் பிடிக்கத்தானே..?
 


 
..?' 

Saturday, October 19, 2013

பாட்டுப் புஸ்தகம் ..

..`மலர்விழி நிலையம் ' என்ற பெயரில் கோவையில் ஒரு கடை இருக்கிறது. நாள் , மாத ,வருடக் காலண்டர்கள் அச்சடித்து விற்பவர்கள் அவர்கள். தவிர இன்னொன்றையும் செய்தார்கள்.தமிழ்த்திரைப்படப் பாடல்கள் அடங்கிய பாட்டுப் புத்தகங்களையும்  (எமக்கு அவை புஸ்தகம்தான் ) அச்சிட்டுத் தந்தார்கள். படத்தலைப்பை விளம்பரத்தில் கண்ட எழுத்துருவிலேயே பா.புத்தகத்திலும் காண முடிந்தது.மட்டிக் காகிதத்தில் உருவான அதன் அட்டையைத்  திறந்தால் ,முதல் பக்கத்தில் நடிகர் , நடிகையர் , தயாரிப்பு , தொழில்நுட்பக் கலைஞர்கள் - என ஒரு பட்டியல் இருக்கும். அதிலும் ஒளிப்பதிவாளர் , படத்தொகுப்பாளர் , இடம்பெற்றிருந்தார்களா  என்பது நினைவில்லை.

   அடுத்த பக்கத்தில் கதைச் சுருக்கம். இதைக் கடைசிப்பக்கம் கூட வைப்பதுண்டு. கதையின் அமைப்பைக் கூறி ,முடிவைச் சொல்லாமல் இரண்டு  மூன்று கேள்விகளால் , படிக்கும் நம்மை யோசிக்க வைத்து `மீதியை வெண்திரையில் காண்க ' எனச் சொல்லியிருப்பார்கள். விக்கிரமாதித்தன் கதையைப் படித்துப் பழகிய நாம் , நமது முயற்சியில் சற்றும் தளராமல் படத்தின் முடிவு என்னவாயிருக்கும் எனச் சிந்தித்துக் கொண்டிருப்போம். அனால், நம் முடிவுக்கு வேலையிருக்காது. ஏற்கெனவே படம் பார்த்துவிட்டு வந்த மகராசர்கள் முடிவைச் சொல்லிவிடுவார்கள்.

   புத்தகத்தில் பாட்டு தொடங்குமிடத்தில் இடப்புறம் பாடலாசிரியர் பெயர், வலப்புறம் பாடகர்கள் பெயர் என இருக்கும். இவையே இட,வலம் மாறியும் இருக்கலாம். தொகையறா, பல்லவி, அனுபல்லவி, சரணம் என அடைப்புக் குறிக்குள் சிறுதலைப்புத் தந்திருப்பார்கள்.

   வானொலியில் பாட்டைக் கேட்டு அவசர அவசரமாய் எழுதித் தனி நோட்டில் பதித்து ஆவணப் படுத்தி வைப்பதும்  உண்டு. அந்த நோட்டு ஊர்முழுவதும் உலவிக் கொண்டிருக்கும்.

     இருகூர் லட்சுமி தியேட்டர் முன்புறம் இருந்த ஜூபிலி டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்டில் டைப்பிங் வாத்தியாராக இருந்த தேவராஜ் அண்ணனின் பாட்டுநோட்டு ,என்.ஜி.ஆர்.புரம் முழுவதும் பிரசித்தம். அண்ணன் ரசனை வேறுமாதிரி.எம்.ஜி.ஆர் , சிவாஜி, பாடல்கள் இருக்காது அவர் நோட்டில். பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ .எம்.ராஜா, ஜே.பி.சந்திரபாபு, கண்டசாலா, ஜிக்கி , ஜமுனாராணி, மாதுரி, திருச்சி லோகநாதன் போன்றவர்கள் மட்டுமே அதில் இருப்பார்கள்.அவர், எங்கள் ராஜேஸ்வரி அக்காவைப் பெண்கேட்க முயன்றதும், சாதிமறுப்பு மணத்திற்குச் சம்மதிக்காத தனசேகரண்ணன் அவரைத் தனியாக அழைத்துப் பேசி (மிரட்டி) அனுப்பியதும் ஒரு சோகக் காவிய முடிவு.

   அச்சுப்பிழை என்பதை உணராமல் அப்படியே மனப்பாடம் செய்துவிடுவது என் பழக்கம். அதனாலேயே பல பிரசினைகளைச் சந்தித்ததும் உண்டு.`கருணை மழையே ..மேரிமாதா ..கண்கள் நிறவாயோ..'என்றுதான் பாடுவேன்.செண்பகவல்லியக்கா  அடிக்க வரும்.`திறவாயோ'ன்னுதாண்டா பாட்டு.. கொல்லாதடா -என்று திருத்தம் வெளியிடுவார். கேட்க மாட்டேன்.

    இந்திப்படப் பாடல்களும் புத்தக வடிவில் கிடைத்தன.அச்சுப்பிழை, எழுத்துப்பிழைகளுக்கும் அளவே இருக்காது அதில். புரியாத மொழி வேறு.மனப்பாடம் செய்யத் தோதாகவும் இல்லாமல் சோதிக்கும். `பாபி'புத்தகத்தை வைத்துக்கொண்டு பாட்டைக் கேட்க முடியாது..`மை ஷாயர் தோ நஹீன்' - என  அச்சில் இருப்பதை ஷைலேந்திரசிங், அழகாக` மே  ஷாய்ர் தோ நஹீ..என இழுத்துக்கொண்டு போய்விடுவார்.

   பாட்டுப் புத்தகங்களைத் தொகுத்துக் குமுதம் தொடர்கதைபோலப் பைண்டிங் செய்து வைப்பதும் உண்டு.ஆனால் அதில் சுவாரசியம் இருக்காது.ஒன்று, தனித்தனிப் புத்தகங்களாக இருக்க வேண்டும். அல்லது, எம்.ஜி.ஆர் காதல் பாடல்கள், சிவாஜி தத்துவப் பாடல்கள் போல ஒருபொருள் குறித்ததாக இருக்க வேண்டும்.பாடி நடிக்கும் சந்திரபாபு,எப்பொழுதும் ஸ்டார்தான்.அவர் பாடித் தொகுத்த புத்தகங்கள் கிட்டத்தட்ட எல்லார் கையிலும் இருக்கும். பி.சுசீலா , எஸ்.ஜானகி, தனிப்பாடல்கள் பெண்களுக்கானவை.அதை வைத்துக்கொண்டு தெய்வத்தின் தெய்வம்- படத்தில் வரும் `நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை 'பாடலை உருப்போட்டுக் கொண்டிருப்பார்கள் எங்கள் அக்காமார்கள்.அந்தப் பாடல் உள்ள பக்கத்தின் மேல் நுனி எப்பொழுதும் மதிக்கப்பட்டே இருக்கும்.`கன்னிமனம் உனக்கெனவே காத்திருக்குது..இன்று காவல்தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது ..-எனக் கிசுகிசுக்கும் குரல் , மாதுளஞ் செடியருகே தாமரைச் செல்வியக்காவிடம் இருந்து சோகமாய் வழிந்து கொண்டிருக்கும்.

   பல வடிவங்களிலும் வந்தன பாட்டுப் புத்தகங்கள். சதுரமாக, நீள் செவ்வகமாக , ஆல்பம் போல , இசைத்தட்டு  (இன்றைய குறுவட்டு ) போன்ற வடிவத்திலும்கூட இருந்தன. சரிகை நூலால் கட்டப்பட்ட புத்தகம் , படத்தயாரிப்பின் செல்வாக்கைச் சொன்னது.

   எனக்குப்பிடித்த பாட்டுப் புத்தகம் `பட்டிக்காட்டுப் பொன்னையா' படத்தினுடையது.எம்.ஜி.ஆர் அதில் இரட்டைவேடம்.இன்றைய முதல்வர் அதில் நாயகி. நெஞ்சுவரை எடுத்த அவரின் புகைப்படத்தை அப்படியே வைத்துப் புத்தக வடிவில் அமைத்திருந்தார்கள்.முன்புறம், சிரித்துக் கொண்டும் , பின்புறம் அளவான சிரிப்பு  மற்றும் குறுந்தாடியுடனும் மற்றவர்.உருவத்தை அனுசரித்து உள்ளே பாடல்கள் அச்சிடப்பட்டிருந்தன.

   வழமைப்படி பாடல்களை மனப்பாடம் செய்தபின் இன்னொன்றையும் செய்தேன்.நீள சைஸ் அன்ரூல்டு நோட்டின்மீது பாட்டுப்புத்தகத்தை வைத்துப்  பென்சிலால்  புத்தக ஓரத்தின்மீது கோடு இழுத்துக்கொண்டு வர , நோட்டில் எம்.ஜி.ஆரின் புறத்தோற்றம் உருவாகியிருந்தது.புத்தகத்தை எடுத்துவிட்டுக் கண், காது, மூக்கு, ஆகியவற்றைப் புத்தகத்தைப் பார்த்துப் பார்த்தே வரைந்து பார்த்தேன்.முதல் எம்.ஜி.ஆர் சரியாக வரவில்லை.அடுத்தவரை முயன்றேன்.கிட்டத்தட்ட சரியாக வந்திருக்கிறது எனத் திருப்திப் பட்டுக் கொண்ட நேரம்  `என்னடா பண்றே..? என்றவாறே வந்தார் ராஜு அண்ணன் . வரைந்ததைக் காட்டினேன்.  ஒவ்வொரு படத்தையும் பார்த்ததும் ஒரு முறை முறைப்பார் என்னை. மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் அவர்.பின்னர்,` தாடியைக் குறைச்சுக்கடா ..வாத்தியாருக்கு அம்சமாயிருக்கும்..' எனக் கூறிவிட்டுப் போனார். நிம்மதியாயிருந்தது.

   என்னிடமும் ஒரு பாட்டுப்புத்தகத் தொகுப்பு இருந்தது.நடிகர் திலகம், புரட்சித்தலைவர், மக்கள் கலைஞர், காதல் மன்னன், நவரசத்திலகம் எனப் பலரின் பாடல்களும் கலந்துகட்டி இருந்தன.பாட்டுநோட்டொன்றும் வைத்திருந்தேன். அதில் என் கையெழுத்தைப் பார்த்து எனக்கே பெருமையாக இருக்கும்.இடிகரை மணியகாரன்பாளையத்தில் அது சுற்றாத வீடில்லை.

   இசைத்தட்டுக் காலம் முடிந்து, டேப்ரிகார்டர் போய்க் குறுவட்டும், பென்  டிரைவும்  ஆட்சிக்கு வந்துவிட்ட இந்தக் காலத்தில் நான் கடைசியாக வாங்கிய பாட்டுப்புத்தகம் எதுவென யோசித்துப் பார்த்தேன்.அது இசைஞானியின் இசையில் வந்த `சின்னத்தாயி' படத்தினுடையது.


Sunday, August 18, 2013

..சரியான எம்டன் தானப்பா..!

    ‘எம்டன் குண்டு விழுந்த இடம் உஙக  ஆபீஸ் பக்கத்தில்தானே..போய் ஒரு எட்டுப் பாத்துட்டு வந்தீங்களா..?’-என்றிருந்தார் துரை பாஸ்கரன் அண்ணன்.போனேன்.கூப்பிடுதூரத்தில் உள்ள பாரிமுனைக்கருகே உயர்நீதிமன்ற வெளிச்சுவரோரம் அந்த நிகழ்வுக்கான அடையாளம் கல்வெட்டாய்ப் பொறிக்கப் பட்டிருக்கிறது.
    பார்த்துத் திரும்பியதும் அந்தச் சரித்திர சம்பவம் நினைவில் ஓடத் தொடங்கியது.
    அதிகாரப் பங்கீட்டுக்க்காக வல்லாதிக்க நாடுகள் ஆலாய்ப் பறந்து முதல் உலகப்போருக்குக் காரணமாகின.கடல்வணிகத்தில் கெட்டிக்காரன் எவனோ அவனே உலகின் சின்னஞ்சிறு நாடுகளைப் பிடிக்கவும் அங்குள்ள செல்வங்களைச் சுரண்டவும் தலைப்பட்டான்.பொழுதுபோக்க , விடுமுறையைக்கொண்டாட அவனுக்குப் புதிய இடங்கள் கிட்டின.மண்ணாசை போதையாய்க் கிறங்கடிக்க உலகைச் சுற்றிச் சுற்றி வந்தான்.தனித்தும் ,கூட்டுச் சேர்ந்தும் தன்னைப் பெரும் சக்தியாய் மாற்றிக்கொண்டான்.
    சூரியன் மறையாத பிரித்தானியப் பேரரசுக்குப் புதுப்புது அடிமை நாடுகள்  கிடைத்தன.சிறுநாடுகளைப் பிரான்சு, ஸ்பெயின்,போர்ச்சுகல் போன்றவை பங்குபோட்டுக் கொண்டன.
   ஜெர்மனியும் இந்தப்போட்டிக்கு  வரிந்துகட்டிக் கொண்டு வந்து நின்றது.சீனத்தின் ஒரு சிறுபகுதியை அது கையகப்படுத்தி வைத்திருந்தது என்றால் நம்ப முடிகிறதா..ஆனால் அது உண்மைதான்.கொஞ்சம் மாத்தி யோசித்த ஜெர்மனி ஒன்றைச் செய்தது.உலகின் துறைமுக நகரங்களில் நடக்கும் வணிகத்தைத் தகர்ப்பதன்மூலம் கடல்புரங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எண்ணியது.இதற்கான திட்டம் ஒன்றையும் தீட்டியது.ஊர்மெச்சும் தனது எந்திரத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திப் புதிய போர்க்கப்பல்களை உருவாக்கத் தொடங்கியது.
    1908-ஆம் ஆண்டு  அது உருவாக்கிய போர்க்கப்பல்தான் ’எம்டன்’.தனது நாட்டின் துறைமுக நகரம் ஒன்றின் பெயரைத்தான் அதற்கு வைத்து மகிழ்ந்தார்கள் அவர்கள்.துணிவும் தந்திரமும் கொண்ட வான் முல்லர் என்பார் அதன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.தனது ஆதிக்கத்தின் கீழிருந்த சீனப்பகுதியான கியசாவ் என்ற இடத்திலிருந்து பயணத்தைத் தொடங்கியது ஜெர்மானிய எம்டன்.
    வணிகக்கப்பல்களைத் தகர்ப்பதும் அவற்றிலுள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதும் அதன் வேலையானது. துறைமுக நகரங்களைக் குண்டுவீசித் தகர்ப்பது கூடுதல் பணி.
    செப் 10 தொடங்கி நவ 9 வரை இரண்டே மாதங்களில் உலகக் கடல்வணிகத்தைப் படாதபாடு படுத்தி விட்டது இந்தக் கப்பல்.24 கப்பல்களை மூழ்கடித்தும், 10 மில்லியன் டாலர் வரை சேதப்படுத்திவிட்டும்தான்   ஓய்ந்தது அதன் பயணம்.
    1914-ஆம் ஆண்டு.இந்தியப் பெருங்கடல் அற்றை நாளில் ’ஒரு பெரிய பிரிட்டிஷ் ஏரி’ என்றே அழைக்கப்பட்டது.துறைமுகங்களும், வணிகச் சந்தடியும் இந்துப்பெருங்கடற்பரப்பைக் கண்ணயராப் பகுதியாக மாற்றியிருந்தது.இந்தக் கலகலப்பைச் சிதைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் கடலில் ஏதோ ஒரு பகுதியில் வட்டமிட்டுக் கொண்டிருந்த எம்டனை சென்னைத்துறைமுகத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை.
    செப் 1ஆம் தேதி எம்டன் சென்னையை நெருங்கிவிட்டது என்ற தகவல் கிடைத்ததும் ஆயிரக் கணக்கில் இரவோடிரவாக ஊரைவிட்டு ஓடிப்போனவர்களும் உண்டு.பிரிட்டிஷ் அரசை ஜெர்மனி வென்றுவிட்டால் தனது புதிய முதலாளியின் காலடியில் பத்திரமாக இருக்க ஜெர்மன்மொழியை அவசர அவசரமாகக் கற்றுக் கொள்ள முனைந்தவர்களும் உண்டு.
    இந்தியப் பெருங்கடலைப் பீதிக்குள்ளாக்கிக் கொண்டிருந்த இந்தக் கப்பலால் அதன் முக்கியக் கடல்வழியான கொழும்பு-சிங்கப்பூர் வழி சந்தடியற்றுப் போனது.பயத்தில் கப்பலகள் சரக்குடன் துறைமுகங்களிலேயே காத்துக் கிடந்தன.காப்பீட்டுத்தொகை எகிறிக்கொண்டிருந்தாலும் வெளியே கொண்டுவர எந்தக் கம்பெனிக்கும் துணிவு வரவில்லை.
    ஒரேயொரு போர்க்கப்பல் தன் சாம்ராஜயத்தையே கேலிக்குரியதாக்கிக் கொண்டிருப்பதைப் புரிந்துகொண்ட பிரிட்டிஷ் அரசு துணைகளைத் தேடத் தொடங்கியது.சில நாட்களில் பிரிட்டிஷ்,பிரெஞ்சு,ஆஸ்திரேலிய, ரஷ்யப் போர்க்கப்பல்கள் எம்டனைச் சுற்றிவளைத்தன.ஆனால், நடந்தது வேறு.அத்தனை கப்பல்களையும் ஓடஓட விரட்டியடித்துச் சிதைத்தது எம்டன்.
    செப்22-ஆம் நாள்.இந்தியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு மூலையை எட்டிய அது  சென்னையை நோக்கி விரைந்தது.எம்டன் எங்கே வரப்போகிறது என்ற அசட்டையை அது நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது.
    இரவு 9.30 மணி.வங்கக்கடலில் 3000 கஜதூரத்தில் இருந்துகொண்டு  தனது 10.5 செ.மீ (4.1 அங்குல) எடைகொண்ட குண்டுகளைச் சென்னைநோக்கி வீசத்தொடங்கியது.துறைமுகத்தில் இருந்த பர்மா ஆயில் கம்பெனியின் கிடங்குகளின்மீது சரமாரியாக விழுந்த குண்டுகள் அதனைத் தாக்கிச் சிதைத்தன. முதல் 30 சுற்றுகளிலேயே  முற்றிலுமாகச் சேதமடைந்தன எண்ணெய்க் கிடங்குகள்.10 மணிவரை அரைமணிநேரத்திற்குள் 105 சுற்றுகள் வீசிமுடித்த பின்னர்தான் இடத்தைவிட்டு நகர்ந்தது எம்டன்.இந்தத் தாக்குதலில் 20 பேர் காயமடைந்தனர்.5 மாலுமிகள் உயிரிழந்தனர்.
    சென்னையைவிட்டு நழுவிச் சென்ற எம்டன்  அதன்பின் இந்தியப்பெருங்கடலிலேயே  வட்டமடித்து ,இலங்கையைச் சுற்றி இலட்சத்தீவுகள் வரை சென்று சிட்னியில் சுற்றிவளைக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
   சென்னைத்தாக்குதலின்போது சில குண்டுகள் உயர்நீதிமன்ற  வடக்கு நுழைவாயிலிலும் விழுந்து சுவரைச் சேதப்படுத்தியிருக்கின்றன.இன்று அந்த இடத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கல்வெட்டு மட்டும் இருந்துகொண்டு இந்தச் செய்தியைச் சொல்லிக்கொண்டிருக்கிறது.
    மறைமுகமாய்த் தீச்செயல் செய்து, அகப்படாமல் நழுவி விடுபவனைச் ’சரியான எம்டன்’ எனத் தமிழர்கள் விளிக்கும் சொலவடை அன்றுதான் தோன்றியது எனச் சொல்லவேண்டியதில்லை. 

Friday, August 2, 2013

அழகிய(ர்) சென்னை..!

..கடுமையான கோடையின் தொடக்கத்தில் சென்னை வந்து சேர்ந்தேன்.உயர்பதவியின் மீதான பணியிட மாறுதல் வரவழைத்திருந்தது.
  தங்குமிடத்தில் இருந்து கிளம்பிப் பேருந்து,ரயில்நிலையம் வருவதற்குள் சட்டை நனைந்துவிடும்.மக்கள்வெள்ளத்தில் நீந்தி அலுவலகம் நுழையும்போது உடம்பு முழுதும் கசகசக்கும்.பகலில் வெளியே நடமாட முடியாது.ஒரு பச்சைமரம் கண்ணுக்குத் தெரியாது.வியர்வை ஊற்றிக்கொண்டேயிருக்கும்.
  ஆனாலும் அவசர அவசரமாக் நடந்துகொண்டேயிருக்கிற மனிதரை எங்கும் பார்க்க முடியும்.யாராருக்கு என்ன வேலைகளோ..?
  வெயிலை வெல்லப் பல வழிகளை வைத்திருக்கிறார்கள் சென்னை மக்கள்.குறிப்பாகப் பெண்கள்.உடல் முழுவதையும் மறைத்துக் கொள்ளும் உடைகளை அணிந்துகொள்கிறார்கள்.கண்ணுக்குக் குளிர்கண்ணாடி.’தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி - பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்’ எனப் பாரதி பாடியதை அவர்கள் நினைவுபடுத்துவார்கள்.
  ஆயினும் உஷா ராஜேந்தர் மாதிரி  சமூக சேவகியோ,ரேகா மாதிரி பருத்திப்புடைவை டீச்சரோ எவரும் கண்ணில் பட்டாரில்லை என்பது ஒரு துக்கம்.
  சாலையோரத்தில் இளநீர் வண்டிகள்,முலாம்பழம்,சாத்துக்குடிச் சாறு பிழிந்து தரும் தற்காலிகக் கடைகள் எனக் கூட்டமாயிருக்கும்.ஆயினும், இந்த வேகாத வேனலில் சிலர் கரும்புச்சாறும் சுக்குக்காபியும் குடித்து நம்மைக் கலவரப் படுத்துவார்கள்.பப்பாளி,வெள்ளரி,அன்னாசிப்பழங்களை வசதியான வடிவில் வெட்டி ஞெகிழிக்கோப்பையில் அடைத்து விற்பதை வாங்கி மர்ப் பல்குச்சி உதவியுடன் கொரித்துக் கொள்கிறார்கள்.
  இவை எல்லாவற்றையும் விட வெயிலைச் சமாளிப்பதற்குக் குளிர்ந்த தண்ணீர் போதும் என்பது நம் கட்சி.ஆதரவு அதிகம் இல்லாத கட்சி.எம் அலுவலகச் சன்னலோரம் கொஞ்சம் கடற்காற்று வரும்.அங்கே போய்ச் சிறிதுநேரம் நின்றுகொள்வது ஆறுதலாயிருக்கும்.
  அப்படியாக வெயிலோடு விளையாடி,உறவாடி,ரொம்பத்தான் வாடியும் வதங்கியும் போன ஒரு நல்லிளம் பகல் வேளையில் ஒரு பெண்ணைக் கண்டேன்.தள்ளுவண்டியில் ஒரு பெரிய அண்டா,அதனருகே உப்பு,மிளகாய்ப்பொடி தூவிய மாங்காய்த்துண்டுகள்,மோர்மிளகாய்,கொத்தவரை வத்தல் எல்லாம் தனித்தனித் தட்டுகளில் வைத்திருந்தார் அவர்.ஒரே அளவிலான தண்ணீர்ச் செம்புகளும் பக்கத்தில் குப்புறக் கவிழ்த்து வைக்கப் பட்டிருந்தன.
  நெருங்கிப் போய் ‘என்னக்கா இது..?’எனக் கேட்டேன்.தலையை உயர்த்திப் பார்த்து ‘கேப்பைக்கூழ்..குடிக்கிறியா..?’ என்றார்.கம்மங்கூழை எதிர்பார்த்திருந்தேன்.ராகி என அறியப்பட்டிருந்த கேவுறு,சீயம்,கேப்பை என்றெல்லாம் பேர்கொண்ட அந்தப் புன்செய்ப்பயிர் விளையும் வானம்பார்த்த பூமிகள் நினைவுக்கு வந்தன.
  எங்கள் ஊரிலும் சோளம்,ராகி,தட்டைப் பயறு (காராமணி என்பார் தெற்கத்தியர்),உளுந்து,கம்பு,நரிப்பயறு  எல்லாம் விளைந்து வந்தன.சோளக் காட்டில் ஊடுபயிர் தட்டையும்,நரிப் பயறும்தான்.இவை அனைத்தையும் உப்பு மட்டும் சேர்த்து அவித்தோ,அப்படியே அனலில்வாட்டியோஉண்ண முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
  கேப்பைக்கூழ் நன்றாயிருந்தது.தொட்டுக்கொள்ள உப்புமிளகாப்பொடி சேர்த்த மாங்காய்த்துண்டுகளை ஒரு தட்டில்வைத்துத் தந்தார் அவர்.வேண்டாம் என மறுத்துவிட்டேன்.’சும்மா சாப்டு’-என வற்புறுத்தியதால் அந்த ரகசியத்தைச் சொல்லவேண்டியதாயிற்று.குருதியழுத்தம் இவற்றை அனுமதிக்காது என்பதை.ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டார் அவர்.
  அடுத்த நாளும் போனேன்.இம்முறை கூழ்தரும் செம்பை இன்னொருமுறை கழுவி எடுத்து ஊற்றித்தந்தார்.நான்பாட்டுக்குக் குடிக்க ஆரம்பித்தபோது ‘ இந்தா சார்..’ என்றார். கையில் இருந்த தட்டில் அவித்த வேர்க்கடலை.கிள்ளிப்போட்ட பச்சைமிளகாய்த் துண்டுகள் அதன்மேல் அமர்ந்திருந்தன. ‘என்னக்கா இது .?’ என்றேன்.’நீதான் எங்க சேர்வையச் சாப்ட மாட்டன்றியே..ஒனக்காக அவிச்சகடல வாங்கிவெச்சேன்.உப்பு இருக்காது.புடிச்சா பச்சமொளகா இருக்கு.தொட்டுக்க..’ என்றார்.
  ஒரேயொரு பத்துரூபாய் வியாபாரத்தில் இப்படி அன்பையும் சேர்த்து அடைத்துத் தரமுடியுமா..தன் காட்டில் விளைந்த கம்பு,வேர்க்கடலையை மூட்டைகட்டிக் கொண்டுவரும் எங்கள் ஏழூர் அத்தை நினைவுக்கு வந்தார்.
  எண்ணெய்த்தலை,வெற்றிலை வாய்,கறுப்புப்பாசிக் கழுத்து,மாம்பழ நிறச் சேலையுடன் எளிய உருவத்தில் இருந்த அவர்,சென்னை மாநகரத்து அழகியரில் ஒருவராய்த் தெரிந்தார்.
   

Sunday, July 14, 2013

பில் கேட்ஸ் Vs கவுண்டமணி

..அந்த இன்னொரு பழம் எங்கேடா..?
..அதாண்ணே இது..!
   - தமிழ்த் திரையுலகம் மறந்துவிடமுடியாத நகைச்சுவைக் காட்சியொன்றில் வரும் வசனங்கள் இவை.
    எளிமையின் அடையாளம் வாழைப்பழம்.ஏழைமக்கள் வாங்கி உண்ணக்கூடிய அளவில் குறைந்த விலைக்குக் கிடைக்கக் கூடியது.நல்ல காரியங்கள் அனைத்திலும் தட்டின்மேல் கம்பீரமாய் அமர்ந்திருப்பது இது.உண்பதற்கு இனிய பழங்களை மட்டுமல்லாமல் சமையலுக்குக் காயும் பூவும் ; இட்டு உண்ண இலை ; நல்ல செய்தி ஊருக்குத் தெரிய முழுமரம் ; பித்தம் போக்கிட வேர் - என அடிமுதல் நுனிவரை அனைத்துப் பாகங்களையும் மனிதப் பயன்பாட்டுகுத் தருவது வாழை.
    முக்கனிகளில் ஒன்றான இதில் பூவன் , நாடன் , பேயன் ,செவ்வாழை ,கதலி - எனப் பல வகைகள் உண்டு.ஒவ்வொரு வகையிலும் ஏதாவது ஒரு மருத்துவக் குணம் உண்டெனவும் கருதுகிறார்கள்.
    சங்கத் தமிழ்ப் பாடல்கள் வாழையை, வளமான நிலப்பகுதியின் குறியீடாக அடையாளப்படுத்துகின்றன.மலையும் காடும் வயலும் உள்ள நிலப்பரப்புகள் யாவும் சுவைதரும் வாழையின் வாழிடமாய் இருந்திருக்கின்றன.’மலைவாழை அல்லவோ கல்வி ; அதை வாயாற உண்ணுவாய் போஎன் புதல்வி’ எனக் கல்வியின் மேன்மையைச் சுட்டிப் பாவேந்தர் பாரதிதாசனார் பாடுகிறார்.அறிஞர் அண்ணாவின் ‘செவ்வாழை’சிறுகதை அவரின் எழுத்துலகச் சாதனை எனக் கருதப் படுகிறது.வாழையடிவாழையாக எனும் வாழ்த்துவரிகள் இறப்பிலா வாழ்க்கைத் தொடரியக்கதைக் குறிக்கிறது.
    ஏழைகளுக்க்ப் பசியை ஆற்றித்தரும் ஓர் எளிய உணவு, எப்படிப் அபணக்கர மேன்மக்களுக்கு அஜீரணத்தை ஏற்படுத்தியிருகிறது என்பதைப் பார்த்தாக வேண்டும் நாம்.
    பில் கேட்ஸ் - தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் எண்ணற்ற பேருக்கு வாழ்வளித்துக் கொண்டிருப்பவர்.இந்திய இளைஞர்களின் முன்மாதிரி தேர்வு. இந்த இருக்கப்பட்ட மகராசன் ஏன் ஒரு வாழைப்பழப் பஞ்சாயத்துக்கு வரவேண்டும்..? காரணம் இருக்கிறது.
    இது மரபுமாற்றப் பயிர்களின் காலம்.’துள்ளும் தக்காளி’துவளும் கத்தரிக்காய்’ எனக் குரலெழுப்பி வந்துகொண்ருக்கின்றன மரபுமாற்ற உணவுப்பயிர்கள்.மான்சாட்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள் தமது பயிர்களை ஏழைநாடுகளில் விற்றுத் தம்மை வளர்த்துப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் உணவுப்பயிர்களின்மீது தமது ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் கிட்டத்தட்டத் தம்மைக் கடவுளாகவே கருதிக் கொள்கின்றன.
          உயிர்களை  உருவாக்குகிறோம்..
         உணவை உருவாக்குகிறோம்..
         ஊட்டத்தை உருவாக்குகிறோம்..
             - என்ற முழக்கத்தை இவை முன்வைக்கின்றன.
     வானம்பார்த்த பூமியில் விளைந்து நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் ஊட்டம் தந்துகொண்டிருந்த புன்செய்ப்பயிர்களை இப்போது தேடித்தான் காணவேண்டியிருக்கிறது.இயற்கைவழி விளைவித்த உணவுப்பொருள்கல் விற்கும் கடைகளை ஒரு நகரத்திற்கு ஒன்றிரண்டு எனும் விகிதத்தில் மட்டுமே காண முடிகிறது.கம்பங்கூழ் அருந்திப் பழக்கப்படாத வீடுகளில் எல்லாம் தவறாமல் ஆர்லிக்ஸ் புட்டிகள் இருக்கின்றன.சோளம்,ராகி,வரகு,சாமையை மறந்துவிட்டுக் காலையில் ஓட்ஸ் கஞ்சி குடிக்கிறார்கள் தமிழ்மக்கள்.
    விதைத்தானியமே எடுத்துவைக்க முடியாத விதைகளை மட்டுமே விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கின்றன பன்னாட்டு விதை நிறுவனங்கள்.ஒரு விவசாயி தனது அடுத்த விதைப்புக்கு அவர்களையே நாடிக் கையேந்தி நிற்க வேண்டிய நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
    இந்நிலையில், அய்யா பில்கேட்ஸ் அவர்களின் அண்மைய முயற்சியொன்று இந்திய உழவனைத் திடுக்கிட வைத்திருக்கிறது.ஆஸ்திரேலியப் பயிர் விஞ்ஞானி ஜேம்ஸ் டேல் என்பாருடன் சேர்ந்து அவர் புதிய ஆராய்ச்சி ஒன்றை வெற்றிகரமாக முடித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.
   ‘வாழைப்பழம் ஒரு முக்கிய உணவு மட்டுமல்ல ; மருந்தும்கூட-’ என்பதே அது.இந்தக்’கண்டுபிடிப்பின்’ பயனாக இந்தியா மற்றும் ஆப்பிரிக்க உகாண்டா நாடுகளில் பிறப்பு மரணங்களைத் தடுக்க முடியுமாம்.மேலும்,பிள்ளைபெறும் தாய்மார்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்தச்சோகை நோயைத் தவிர்க்கவும் முடியுமாம்.தாம் கணடுபிடித்த புதிய வாழையில் இதற்கான மருத்துவக் குணங்களைப் பொதித்து வைத்திருப்பதாக மார்தட்டுகிறார் அவர்.
   ‘மான்சாண்டோ நிறுவனம் எவ்வாறு நமது பருத்தி விவசாயத்தைத் திட்டமிட்டு அழித்ததோ,அதே திட்டத்தின் மறுவடிவம்தான் இது.நமதுவாழைச் செல்வத்தைமுழுமையாக அபகரிப்பது மட்டுமே பில்கேட்ஸின் நோக்கம்’-என எச்சரிக்கை விடுக்கிறார் இந்தியாவின் தலைசிறந்த பயிர் விஞ்ஞானியும் சூழலியப்போராளியுமான டாக்டர். வந்தனா சிவா.மான்சாண்டோவின் உணவுப்பயிர் இருப்பில் 5 இலட்சம் பங்குகளின் மீது பில்கேட்ஸ் முதலீடு செய்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
    நமது வளமார்ந்த உயிர்ப்பனமயச் சூழலைச் சூறையாடுவதும் உணவு உற்பத்தி,நுகர்வின் மீது தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதும் பல பன்னாட்டு நிறுவங்களின் அந்தரங்கத் திட்டமாக இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்..
    ஏற்கெனவே ஆந்திர, மராட்டிய மாநிலங்களின் பருத்தி விவசாயிகளுக்கு மலட்டு விதைகளையும்,மரணத்தையும் பரிசாய்த் தந்தவை இந்த நிறுவனங்கள்.எனவேபணம்படைத்தவர்கள் விடுத்துள்ள இந்த ஆதிக்கப்போரைத் தீரத்துடன் எதிர்கொள்ள வேண்டும் நாம்.   
       
   

Friday, May 17, 2013

சூடு தணியாத கவிதை..! - பாப்லோ நெரூதா

   ..அன்றுதான் என்னை
வந்தடைந்தது கவிதை..

எங்கிருந்து எனத் தெரியாது..

கூதல் பொழுதிலிருந்தா..?
ஏதேனுமொரு நதியிலிருந்தா..?
எப்பொழுது..?

குரல்களாக
வார்த்தைகளாக
மௌனங்களாக
எவையாகவும் இல்லை அது..

தெருவொன்றில்
இரவின் கிளைகளிலிருந்து
பெருந்தீயுடன் சேர்ந்துகொண்டு
வந்து
முகமற்ற என்னைத்
தொட்டது அது..

என்ன சொல்வதெனத்
தெரியவில்லை எனக்கு..

உச்சரிக்க
ஒருபெயருமில்லாத வாயுடன்
கண்ணிழந்தவனாக
நின்றிருந்தேன்..

என்
ஆன்மாவிலிருந்து புறப்பட்டது
ஏதோவொன்று..

சிறகுகள் துறந்து
சூடுதணியாமல் வந்திருந்த
அதனைத்

தேர்ந்துகொண்ட ஒரு
தனி வழியில்
கையகப் படுத்தினேன்..

பிறகு
மிகுந்த வலியுடன் எழுதினேன்
முதல் வரியை..

வலியா
அறியாமையா
அசலான விடுதலையா
இல்லை
ஏதுமில்லாத ஒன்றா..
எதை எழுதினேன்..?

தளையிலாத சொர்க்கமும்
கோள்களும்
என் கண் முன்னே
விரியக் கண்டேன்..

கனித் தோட்டங்கள்
கனிந்த நிழல்கள்

அம்புகளும் நெருப்பும் மலர்களும்
சூடிய மர்மங்கள் கண்டேன்..

பின்னும் இரவுகளையும்
பிரபஞ்சத்தையும்தான்..

தாரகை சூழ்ந்த வான்பரப்பில்
முடிவிலியாய் ஆனேன் நான்..

மர்மத்தின் நிழலாய்
பாதாளத்தின் ஒரு
களங்கமில்லாச் சிறு துளியாய்
மாறினேன்..

நட்சத்திரங்களோடு
பயணித்தேன்..

காற்று வெளியில்
உடைந்த என் இதயம்
நழுவிக் கொண்டிருந்தது..!


Monday, January 7, 2013

நீராலைக் கிராமம்..!

..இது எங்கள் ஊர்.இதற்குப் பெயரில்லை.கிராமம் என்றுதான் அழைப்போம்.’நீராலைக் கிராமம்’ என மற்றவர் அழைப்பதுண்டு.

  இங்கு மின்சாரம் கிடையாது.தேவையுமில்லை.மெழுகுவத்தியும்,தாவர எண்ணெயும் போதும்.நல்லது கெட்டது எம் மக்களுக்குத் தெரியும்.

  இரவுகள் அடர் இருட்டாய் இருக்கும்.அப்படித்தானே  இருக்க வேண்டும்.பகலில் ஏது நட்சத்திரங்கள்..?

  நெல்வயல் உண்டு. உழுவதற்கு எருதும்,குதிரையும்தான்.எந்திரக் கலப்பை இல்லை.விழுந்த மரங்களை விறகுக்காய்ச் சேமிப்போம்.சில மரங்களை வெட்டுவதுண்டு.கல்கரிக்கு அவை பயனாகும்.காடுகளை எரிப்பதில்லை.மாட்டுச்சாணம் எமக்குத் தெரிந்த நல்ல எரிபொருள்.மனிதர் வாழ அடிப்படையான பொருள் போதும். இது இயற்கையை மீறாத வாழ்க்கை.மற்றவர் மறந்த வாழ்க்கையும் கூட.

  இயற்கையின் அங்கம்தான் மனிதர்.ஆனால்,அதை அழிக்கவே முற்படுகின்றனர் அவ்ர்கள்.சார்ந்து வாழ எண்ணமில்லை இன்னும் சிறந்ததைப் படைக்க முயல்கின்றனர் - குறிப்பாக விஞ்ஞானிகள்.இயற்கையின் இதயம் தெரியாது அவர்களுக்கு.மகிழ்ச்சியைத் தர முடியாததை உருவாக்குவது எதற்கு..? ஏனிந்தப் பொய்ப்பெருமிதம்..?

  மனிதர் பலரும் இப்படித்தான்.கண்டுபிடிப்புகளை அதிசயமாய்க் காண்கிறார்கள்.உருவாக்கியவனை வணங்கவும் செய்கிறார்கள்.ஆனால், அவர்களுக்குத் தெரியாது - இயற்கை அழிந்தால் தாமும் அழிந்துவிடுவோம் என்பது.

  சுத்தமான காற்றும்,நீரும்,மரங்களும் இவைகளை உருவாக்கித் தரும் மலையுச்சிப் புற்களும்தான் முக்கியமானவை.

  எல்லாம் மாசடைந்து விட்டன.அழுக்கான காற்று,அசுத்த நீர்.மனித இதயம்  வரை இந்தச் சீர்கேடு.
  .
  கோவில்களும் சாமியார்களும் கிடையாது இங்கு.வயதாகி இறப்பவர்களைக் கொண்டாட்டத்துடன் புதைப்போம். இளவயது மரணம் தாங்காது எங்களுக்கு.

  எனக்கு இப்போது வயது 103. இறப்பிற்குரிய வயதுதான்.ஆனால் வாழ்வது இனியது.உணர்வுமயமானதுகூட..!  .

 காணுங்கள்:
http://vimeo.com/31359086