Friday, November 1, 2013

..திருச்சியில் கவியரங்கம்..

  ..`கோவை வானொலியின் சார்பாகக் கவியரங்க நிகழ்ச்சி நடக்கப் போகிறது '- என்ற செய்தியே எங்களுக்கு மகிழ்வலைகளை  ஏற்படுத்தி விடும்.பங்கேற்பாளர்கள் பட்டியல் , நிகழ்ச்சிகளுக்கிடையே வாசிக்கப்படும்போது அந்த அலைகள் இன்னும் வேகமாக அடிக்க ஆரம்பித்து விடும். மூத்த கவிஞர்கள்  புவியரசு,  சிற்பி, தமிழன்பன் , சக்திக்கனல், சிதம்பரநாதன் , பாலா, தேனரசன், தாராபாரதி போன்றோர் எமக்கு மேடைக் கவிதை முன்னோடிகள்.இவர்களில் யாரோ ஒருவரின் பாதிப்பு எங்கள் வாசிப்பில் தன்னியல்பாகவே பின்னாளில் வந்து சேர்ந்ததில் வியப்பில்லை.

    மணி மேல்நிலைப் பள்ளி நானி பல்கிவாலா கலையரங்கத்தில்தான் பொதுவாகக் கவியரங்க நிகழ்ச்சிகள் நடக்கும்.( அங்கு தொடர்ந்து நடந்துவரும் இன்னொரு நிகழ்வு கம்பன் விழா ). வானொலி ஜாம்பவான்கள் ஜே.கமலநாதன், வி.வி.சுப்ரமணியன், எஸ்.எஸ்.ராஜன் ஆகியோர் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருப்பார்கள். நெய்வேலி இலக்கியச் சிந்தனை போன்ற அமைப்புகளுடன் இணைந்தும் வானொலி  நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது.

  27A பஸ்சைப் பிடித்துக் காந்திபுரம் போய் அங்கிருந்து இன்னொன்றில் ஏறி மணி மேல்நிலைப்பள்ளி நிறுத்தத்தில்  இறங்கி அரங்கில் நுழையும்போது   ஏதோ சொந்தக்காரர்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்ததுபோல இருக்கும்.கமல், திரிபுரசுந்தரி அக்கா,சூலூர் கணேஷ்  என வானொலிக் குயில்கள் வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருக்கும்.

  நாம்தான் முதலில் வந்ததாக்கும் எனப் பெருமிதமாக ஒரு கணக்குப் போட்டு  இருக்கை  பார்த்து அமரப்போனால் அரங்கின் கிழமூலையில் இருந்து கவிஞர் கே.ஆர்.பாபு கையசைப்பார்.அருகில்தான் அவருக்கு வீடு.தனது புல்லட்டில் (பழைய சைக்கிள்தான்) முன்னதாகவே வந்திருப்பார் என யூகித்து முடிக்கும் முன்பாகவே முன்வரிசையில் உமாமகேசுவரி தனது அம்மா -எங்கள் ஜானகி அம்மாவுடன் அமர்ந்திருப்பது தெரியும்.மென்சிரிப்புடன் நலம் விசாரித்துவிட்டு  நிகழ்வில் மூழ்கிப் போவார்.

  சற்றே திரும்பிப்பார்த்தால் கவிஞன்  பழ.சந்திரசேகரனின் தலை தெரியும். நாங்களாவது உள்ளூர் . அவன் திருப்பூரைத் தாண்டி பூச்சக்காட்டுப் புதூரில் இருந்து வரவேண்டும்.கவியரங்கம் என்றால் தவறாமல் வந்துவிடுவான். தலைமைக் கவிஞர் தனது கவிதையை வாசிக்கத் தொடங்கும்போது மேற்புறக் கதவைத் திறந்துகொண்டு  தென்றல் ராஜேந்திரன்  உள்ளே வந்து அமர இடம் தேடிக்கொண்டிருப்பது தெரியும். பங்க்சுவல் பரமானந்தம் அவர்.சரியான நேரத்தில்தான் வந்து நிற்பார். இன்னொரு ப.ப இருக்கிறார். அவர் கவிஞர் சூசன். நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது தென்படுவார். `நீங்க எல்லாரும் வரும்போதே பார்த்தேன்'-எனத் திகில்செய்தியை வாசிப்பார். சி.ஐ.டி யாகப் போயிருக்க வேண்டியவர் .

  வாசித்த கவிஞர்களை நேரில் பார்த்து சிறு நலம் விசாரிப்பும் , பாராட்டும் தெரிவித்துவிட்டு வெளியே வரும் எம் குழு நேராகச் செல்லுமிடம் மகளிர் பாலிடெக்னிக் மூலையில் உள்ள டீக்கடை.ப.வடை, உ.வடையுடனான அந்தக் கடையின் தேநீர் கவியரங்க நிகழ்ச்சிக்கு முன்னும்,பின்னுமான செய்திகளை எங்கள் மூலம் கேட்டுக்கொண்டிருக்கும்.அந்தச் சங்கமம் கவியரங்கம் போன்றதொரு கூடலரங்கம்.

  எங்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் அந்தரங்க ஆசை இருந்தது.புத்தாண்டு, பொங்கல், தீபாவளி சிறப்புக் கவியரங்கில் பங்கேற்க வேண்டும்.ஊருக்குப் பெருமை தேடித் தரவேண்டும்.நாமாக இருந்தால் கவிதையை இப்படித்தான் தொடங்கியிருப்போம் என்றெல்லாம் எண்ணம் விரியும்.ஒவ்வொருவருக்கும் அது நிறைவேறிக் கொண்டும் இருந்தது.

  எனது நாள் வந்தது. வானொலியிலிருந்து வந்திருந்த அழைப்புக் கடிதத்தை எடுத்துப் போனேன்.துணை இயக்குனர் ஜே.கமலநாதன் வரவேற்றார்.`திருச்சியில்  தமிழ்ப்புத்தாண்டுக் கவியரங்கம் நடக்கிறது. கோவை வானொலியின் சார்பாக நீங்கள்  பங்கேற்கிறீர்கள்.வாழ்த்துகள் என்றார்.`புத்தாண்டுச் சிந்தனைகள்' என்பது பொதுத்தலைப்பு.`குழந்தைத் தொழிலாளிகள் ' -எனக்கானது. மகிழ்ந்தது மனம்.

  தொடர்புடைய தகவல்கள், புள்ளிவிவரங்கள் எனக் கொஞ்சம் திரட்டிக் கொண்டேன்.நான்கு நாள்களில் கவிதையும் தயாரானது. வாசித்துப் பார்த்து 5 நிமிடங்கள் வரும் வகையில் வரம்புகட்டி எடுத்துப் போனேன். அமைதியாகப் படித்து முடித்ததும் கமல் சொன்னார் : `இப்படியே இருக்கட்டும். எதையும் நீக்கிவிட வேண்டாம்.தொடக்கம்,முடிவுக்காக இன்னும் ஒரு நிமிடம் வருகிறமாதிரி புதிதாய் எழுதிக் கொள்ளுங்கள். போதும் ' என்றார்.திருச்சியில் சாரதா லாட்ஜ் வசதியாக இருக்கும்.பொய் வாருங்கள் என வாழ்த்தி அனுப்பினார்.

  நானும் காளிதாசனும் திருச்சிக்குக் கிளம்பினோம்.பேருந்து நிலையம் அருகிலேயே இருந்தது சாரதா. காலையில் வண்டி வந்து அழைத்துப் போனது.நிலையத்தில்  இயக்குனர் கணேசன் ( கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் ) , தமிழ்வாணன் ஆகியோரைச் சந்தித்தோம்.

  ம.வே.பசுபதி அந்தக் கவியரங்கின் தலைவர்.பழுப்புநிறத் தோல்பை ஒன்றை வைத்திருந்தார்.அருகிலேயே ஒரு மஞ்சள் பை.தோல் பையிலிருந்து எழுதப்பட்ட காகிதங்களையும் , மஞ்சள் பையிலிருந்து வெற்றிலைப் பெட்டியையும் எடுத்து வெளியே வைத்தார். சைவப் பேராதீனங்களில் பயின்றவர்.திருப்பனந்தாள் மடத்தின் ஆஸ்தானப் புலவர்.வெற்றிலையைக் குதப்பிக் கொண்டேயிருந்த  வாய் ஒரு சொல் குழறாமல் தமிழ் பேசியது.

  அறிமுகப் படுத்திகொண்டோம்.ஒவ்வொருவரின் பெயரையும், எந்த நிலையத்திலிருந்து கலந்துகொள்கிறோம் என்பதையும் ஒரு தனிக் காகிதத்தில் குறித்துக் கொண்டார். பங்கேற்பாளர்களில் இப்போது  நினைவுக்கு வருபவர்கள் தாராபாரதியும், இரா.நடராசனும்.தா.பாரதியின் கவிதைகளை எங்கள் ஊர் வானொலியிலும் ,நானி கலையரங்கில் நேரிலும் வாசிக்கக் கேட்டிருக்கிறேன்.அவரின்,
             வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
             விரல்கள் பத்தும் மூலதனம்
                  -எனும் வரிகள் புகழ்வாய்ந்தவை.ஒல்லியான உடலில் வெள்ளைச் சட்டையும்,வேட்டியும் ஒட்டிக் கொண்டிருப்பதுபோலத் தெரியும் அவருக்கு.அண்மையில் மறைந்துபோனார்.

  இரா.நடராசன் பள்ளி ஆசிரியர்.` கருப்பு யுத்தம்' என்றொரு கவிதை நூல் எழுதியிருந்தார்.பின்னாளில் அவரின் `ஆயிஷா' சிறுகதையாகவும்,குறும்படமாகவும் வெளிவந்து நீடித்த புகழைத் தேடித்தந்தது.

  கவிதைகளைத் தலைவருக்கு வாசித்துக் காட்டினோம்.தலையசைத்தும், புன்சிரிப்பை உதிர்த்தும் ரசித்தார்.வெற்றிலை,சீவல் தீராச் சுனையாக பெட்டியிலிருந்து வழிந்து கொண்டிருந்தது.பரவியிருந்த காகிதங்களைச்   சேகரித்தவாறே  என்னைப் பார்த்துச் சொன்னார்.` நீங்கதான் முதல்ல வாசிக்கணும்...சரிதானே..?' தோன்றிய  படபடப்பும் வியப்பும், மகிழ்ச்சியாக மாறத் தொடங்கியது.

  திருச்சி பெல் தொழிற்சாலை அரங்கில் நேயர்கள் முன்னிலையில் கவியரங்க நிகழ்ச்சி.ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தார் தலைவர்.எழுதிய காகிதங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.சரிதான்..தொடக்கம் எங்கே..? புதிதாய்,ஒரு நிமிடம் வருகிறமாதிரி என்றெல்லாம் கமல் படித்துப் படித்துச் சொன்னாரே.. அப்புறமாய்ப் பார்த்துக் கொள்ளலாம் என இருந்தாகிவிட்டதே. என்ன செய்வது என யோசித்தேன்.இனி புதிதாய் எழுதினால் சரியாக வருமா .. கவிதைக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லாமல் போய்விட்டால் ..என்றெல்லாம் மனம் அடித்துக் கொண்டது.

  தலைமைக் கவிதையை வாசிக்க ஆரம்பித்தார் தலைவர் .நைசாக நழுவினேன். அரங்கின் பின்புறமிருந்த கழிவறைக்கு ஓடினேன். அவசர அவசரமாக எழுதத் தொடங்கினேன். வாசித்துப் பார்த்தேன்.கொஞ்சம் மாற்றினேன்.கொஞ்சம் அடித்துத் திருத்தினேன்.பிறகு ஓட்டமும் நடையுமாக அரங்கில் நுழைய ..'முதல் கவிஞரை அழைப்போம்..எங்கே அவர்..?' எனத் தலைவர் தேட ஆரம்பித்து விட்டார்.நேராக ஒலிவாங்கி மேடைக்குச் சென்று அங்கிருந்த குவளையில் இருந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தேன்.பார்வையாளர்களின் முன் வரிசையில்  இருந்து காளிதாசன் முறைப்பது தெரிந்தது.`.என்னப்பா...கவிஞருக்கே .படபடப்பா..?' என்ற தலைவரின் குரலைச் சிரித்து ஆமோதித்துப பார்வையாளர்கள் மீதும் அதே சிரிப்பைத் தெளித்துவிட்டுத் தொடங்கினேன் இப்படி :

    `..ஒட்டகங்களுக்கான
       ஓட்டப்பந்தயம் நடக்கும்
       மைதானமாக  மாறிக்கொண்டிருக்கும்
       காவிரியின் கரைக்குக் -
       கொஞ்சம் ஆறுதலாய்ச்
       சிறுவாணித் தண்ணீரைக்
       கோவையிலிருந்து
       கொண்டு வந்திருக்கிறேன்..'
         
           - அரங்கில் கைத்தட்டல் ஆரம்பித்துவிட்டது.இனி என்ன கவலை.. ஒவ்வொரு வார்த்தையையும் நிதானித்து வாசித்தேன்.  குழந்தைகளிடமிருந்து காணாமல் போய்க்கொண்டிருக்கும் குழந்தைமை , வறுமை காரணமாகக் கல்வி துறந்து வேலைக்குப் போவது , விளையாட்டுகளை மறப்பது எனத் தொடங்கிப் பெற்றோர்  கடமைகள், கல்வியின் மேன்மை எனப் பலவற்றைக் கவிதையில் சொன்னேன். வாசித்து முடிந்ததும் நீண்ட கைத்தட்டல்.

     கனவு நிறைவேறியது. பாராட்டுகளை ஏற்றுக் கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து  காளிதாசன் மறக்காமல் கேட்டான்.'எப்பவும் நீங்க இப்படித்தான் பண்றீங்க..அந்தச் சின்ன கேப்ல எங்கதான் போனீங்க ..சிகரெட் பிடிக்கத்தானே..?












 


 
..?'