Saturday, August 28, 2010

பிண அறுவை மருத்துவரின் குறிப்புகள்

நேரம் 11 : 05  மு.ப
சடலம் கிடத்தப் பட்டிருந்தது ..

சஸ்திர மேசையின் செவ்வக மையம்
நெடிது மலர்ந்த உடலுக்குப்
பொருந்தியிருந்தது ..

கள்ளுண்ட சீருடைப் பணியாளர்
சிரமப் பட்டே கொண்டு வந்திருக்க வேண்டும் ..

சங்கிலி பூட்டிப் பதிந்த
கால்களில் நெடுங்காட்டின் புழுதி..

 வயிற்றைக் கிழித்துக்
குடலின் சிறு பகுதி வெட்டப் பட்டுத்
தனியே வைக்கப் பட்டது ..

நெஞ்சைப் பிளந்து  விரித்த போது
உள்ளிருந்து
படபடத்துக் கிளம்பிப்
பறந்ததொரு சிறு குருவி ..

நின்று விட்ட
உதிர ஓட்டத்துடன்
சுனைகளின் சிற்றோசை
உறைந்திருந்தது ..
.
குரல்வளை  எலும்புகள்
சிதைக்கப் பட்டிருந்ததால்
மரணம் சம்பவித்தபோது
 எழுந்த ஒலியை
எவரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை ..

உள்ளுறுப்புகள் இனியும்
சேதாரம்  இன்றிச்
சேகரிக்கப் பட வேண்டும் ..

உறுப்புகளை  விற்று விட
எத்தனிப்பதாய்
எழுந்த கேள்விகளின்
நெற்றிப் பொட்டில்
துவக்கு ரவைகள்  படிந்தன ..


உரிமை கோரிய சிலரையும்
 அப்புறப் படுத்த
 சிரமம்  ஏதும் இருக்கவில்லை ...


அனாதைப் பிணம்
அரசாங்கத்துக்குத்  தானே  சொந்தம் ..

முடிந்தது ஒருவாறாய் ..

சோதனையில்
பங்கேற்ற அனைவருக்கும்
சிறப்புப் படி
வழங்கப் பட்டாயிற்று ..

வெள்ளிக் காசுகள்
குலுங்கிட அனைவரும்
வெளிப் போந்தனர் ..

நேரம் 13 : 10௦ பி.ப

மருத்துவர் தனது
அறிக்கையைத்
தயாரிக்கத் தொடங்கினார்...
.....தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக ...
                          =============௦ =================
    

மதம்

கவிதை ஒரு  மதம்
புண்ணியமும் பாவமும் கிடையாதிங்கு
பக்தனும் மறைநூலும் இல்லை..

நல்ல கவிதை எழுதாதவன்
நரகத்திற்குப் போவதில்லை..


கவிதையை நம்பியவன்
கூட்டம் சேர்வதில்லை ;மதம் மாற்றுவதில்லை
விக்கிரகங்கள் குறித்தான
கலகங்களில்லை
அடுத்தவன் கோவிலை இடிப்பதுமில்லை..

கவிதைக்காரன்
தனித்திருந்து நஞ்சருந்துகிறான்
தனித்தனியே சங்கிலியில் பிணைந்திருக்கிறான்
பைத்தியமாகிச் சாட்டையடி வாங்குகிறான்
பிரபஞ்சம் வாழப் பிரார்த்தித்துக் கொண்டே..

இந்த மதத்தில்
புழுவுக்கும் ஆன்மா உண்டு
புல்லுக்கும் வாழுரிமை உண்டு
நீர்த்துளிக்கும் நிரந்தரமுண்டு
எல்லாப் பொருளுக்கும் உயிருண்டு ..

எப்போதாவது கடவுள் வருகிறார்
வார்த்தைகளில் அப்போது
மின்னலின் பேரொளி ..

அந்த அதிர்வுகளை
ஓசையா மௌனமா என்றறிய
வாசகன் தேடுவான்

கடவுளைக் காண்பான்
அதிர்வுகளையும் மொழியின் ரகசியங்களையும் ..

கவிதை
எனக்கும் மதம்தான்
மதமில்லாதவனின் மதம்.
               {மலையாள மூலம் : சச்சிதானந்தன் }                                                 








 

Tuesday, August 10, 2010

புதிய பதிவர்

விரைவில் எழுத்துகளோடு சந்திக்கிறேன் ..