நேரம் 11 : 05 மு.ப
சடலம் கிடத்தப் பட்டிருந்தது ..
சஸ்திர மேசையின் செவ்வக மையம்
நெடிது மலர்ந்த உடலுக்குப்
பொருந்தியிருந்தது ..
கள்ளுண்ட சீருடைப் பணியாளர்
சிரமப் பட்டே கொண்டு வந்திருக்க வேண்டும் ..
சங்கிலி பூட்டிப் பதிந்த
கால்களில் நெடுங்காட்டின் புழுதி..
வயிற்றைக் கிழித்துக்
குடலின் சிறு பகுதி வெட்டப் பட்டுத்
தனியே வைக்கப் பட்டது ..
நெஞ்சைப் பிளந்து விரித்த போது
உள்ளிருந்து
படபடத்துக் கிளம்பிப்
பறந்ததொரு சிறு குருவி ..
நின்று விட்ட
உதிர ஓட்டத்துடன்
சுனைகளின் சிற்றோசை
உறைந்திருந்தது ..
.
குரல்வளை எலும்புகள்
சிதைக்கப் பட்டிருந்ததால்
மரணம் சம்பவித்தபோது
எழுந்த ஒலியை
எவரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை ..
உள்ளுறுப்புகள் இனியும்
சேதாரம் இன்றிச்
சேகரிக்கப் பட வேண்டும் ..
உறுப்புகளை விற்று விட
எத்தனிப்பதாய்
எழுந்த கேள்விகளின்
நெற்றிப் பொட்டில்
துவக்கு ரவைகள் படிந்தன ..
உரிமை கோரிய சிலரையும்
அப்புறப் படுத்த
சிரமம் ஏதும் இருக்கவில்லை ...
அனாதைப் பிணம்
அரசாங்கத்துக்குத் தானே சொந்தம் ..
முடிந்தது ஒருவாறாய் ..
சோதனையில்
பங்கேற்ற அனைவருக்கும்
சிறப்புப் படி
வழங்கப் பட்டாயிற்று ..
வெள்ளிக் காசுகள்
குலுங்கிட அனைவரும்
வெளிப் போந்தனர் ..
நேரம் 13 : 10௦ பி.ப
மருத்துவர் தனது
அறிக்கையைத்
தயாரிக்கத் தொடங்கினார்...
.....தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக ...
=============௦ =================
No comments:
Post a Comment