Tuesday, May 10, 2011

அவரவர்க்கான மழை..

தார் காணாச் சாலையில் 
கிணற்றின் அகன்ற வாயில் 
மொட்டை மாடியில் 
தென்னை மரத்தில் 
காக்கைக் கூட்டில் 
கூரையிலாக் குளியறையில் 
மண்சுவரில்
வேய்ந்த தகரத்தில்
சகதியோடும் நேற்றைய ஆற்றில்
நஞ்சு தெளித்த பச்சை வயலில்
அலைவரிசைக் கோபுரத்தில்
பொட்டலில் முளைத்த கட்டடங்களில்
வேலிப் படலில்
ரோஜாத் தொட்டியில்
எச்சில் பாத்திரங்கள் குவிந்த வாசலில்
பண்ணை வீட்டில்
வெட்டவெளி ஊஞ்சலில்
தூரத்து மலையில்
உச்சிப் பாறையில்
பெய்து கொண்டிருக்கிறது
அவரவர்க்கான மழை..!.

Thursday, February 17, 2011

நானாயிருக்கப் போதவில்லை எனக்கு..! - எவ்கனி எவ்துஷேன்கோ







நான் விரும்புகிறேன்
உலகின்
எல்லா நாடுகளிலும் பிறந்திட..

கடவுச் சீட்டொன்றும் வேண்டும்
எல்லாத் திசைகளிலும் வீசிக்
கலவரப் படுத்த..

எல்லாக் கடலிலும்
மீனாக..
ஏதோ தெருவில்
நாயாகக் கூடப்
பிறப்பெடுக்க விரும்புகிறேன்..

எந்தச் சிலையின்
முன் நின்றும்
தலை வணங்க மாட்டேன்..

தேவாலயங்களின் முன்
நாடோடிகளுடன்
விளையாட
விருப்பமில்லை எனக்கு..

பைகால் ஏரியின்
ஆழத்தில்
அமிழ்ந்து கிடக்க வேண்டும் நான்..
ஏன்
மிசிசிபியிலும் கூடத்தான்..

குறைகள் மலிந்த
இப் பரந்த வெளியில்
தனித்த
ஒரு களைச் செடியாக விரும்புகிறேன்..

கண்ணாடியின் முன்
தன் கோப்பையை
முத்தமிடும்
நார்சிசசாக அல்ல..

கடவுளின்
எந்தப் படைப்பாகவும்
இருக்க விருப்பம்
எனக்கு..
நோயுற்ற ஒரு கழுதைப் புலியாகக் கூட..

ஆயின்
கொடுங்கோலனாகவோ
அவனது
பூனைக் குட்டியாகவோ அல்ல..

மனிதனாய்
மறு உருவம் பூணவும்
விருப்பம் எனக்கு..

போர்ச் சித்ரவதைக்குள்ளான
ஒருவனாக.
.
ஹாங்காங் சேரிகளில்
அலையும்
வீடற்ற குழந்தையாக.
.
வங்காள தேசத்தில்
வாழும் பிணமாக..

திபெத்தின் சந்நியாசியாக..

ஆப்பிரிக்கக் கருப்பனாக ..

ஆனால்
ராம்போவின் பிம்பமாக அல்ல..

நான்
வெறுப்பது
கபடனை மட்டுமே..

மருத்துவனின் கத்திகளுக்கிடையே
கிடப்பவனாக
 கூனனாக ..
குருடனாக..
எல்லா நோய்களாலும்
பாதிக்கப் பட்டவனாக..

காயங்கள் ,தழும்புகள் ஏந்தியவனாக
போர் அகதியாக

சிகரெட் துண்டுகளைப்
பெருக்குபவனாக..

உன்னதங்களின் உள்ளில்
அசிங்கக் கிருமிகளின்
கதறல் கேட்பதில்லை..

உல்லாசியாக வாழ விரும்பவில்லை
நான்..
கோழைகளின் கும்பலில்
காவல் நாயாக ?
இல்லை..இல்லை..

மேய்ப்பவனாக
மந்தையால் காக்கப் படும் ஒன்றாக
வேண்டாம்..

துன்பத்தை விலை கொடுத்துப் பெறாத
மகிழ்வை
அடக்குமுறையை விலை கொடுத்துப் பெறாத
விடுதலையை விரும்புகிறேன்..

உலகின்
எல்லாப் பெண்களையும்
விரும்புகிறேன்..
ஒரு முறை
பெண்ணாயிருக்கவும்தான்..

இயற்கை
மனிதத் தவறுகளைச்
சுருக்குகிறது..

ஆணுக்கு ஏன்
தாய்மையைத் தரக் கூடாது ?
மென்மழலையின்
வருடல்
அவன் குரூரத்தைக்
குறைத்து விடும்..

மனிதனுக்கு நான்
அன்றைய ரொட்டியாய்
இருக்க வேண்டும் ..

துக்கம் அமிழ்த்திய
வியட்நாமியப் பெண்ணுக்கு
சோற்றுக் கவளமாக..

நேப்பிள்ஸ் தொழிலாளிகளின்
உணவு விடுதிகளில்
ஒரு
மட்டமான சாராயமாக..

நிலவின் சுற்றுப் பாதையில்
ஒரு
பாலாடைத் துணுக்காக ..

எவரும்
என்னை உண்ணட்டும் ..
என்னை அருந்தட்டும்..
என் மரணம்
அர்த்தமுள்ளதாக இருக்கட்டும்..

காலங்கள் அனைத்திற்கும்
உரியவன் நான்..

சரித்திரங்களைத் தகர்ப்பவன்..

புஷ்கினுக்குத்  தேவையானதைக்
கொண்டு வந்து தருவேன்.

ஒரு கணத்தின் வெளியைப்
பன்மடங்காய் உயர்த்துவேன்-
அந்தக் கணத்தில் இருந்துகொண்டே..

ஒரு
சைபீரிய மீனவனுடன்
ஓட்கா அருந்த விரும்புவேன்..
ஹோமருடன்
தாந்தேயுடன்
ஷேக்ஸ்பியர்,டால்ஸ்டாயுடன்
ஆனால்
கோகோ கோலாவை அல்ல..

காங்கோவில்
முழங்கும் இசையுடன் ஆட-
பிரேசிலின் கடற்கரையில்
கால்பந்தைத் துரத்தும் சிறுவனாக
விருப்பம் எனக்கு..

நிலத்தினுள்
ரகசிய ஊற்றைப் போலிருக்கும்
உலக மொழிகள் எல்லாவற்றையும்
அறிந்து கொள்ள விரும்புகிறேன்..

எல்லா வேலைகளையும்
செய்யவே விருப்பம்..

உறுதியாய்ச் சொல்வேன்
எவ்துஷேன்கோ
ஒரு கவிஞன் மட்டுமே..

2 வதாய் அவன் ...
எங்கோ
மறைவாகப் போரிடுபவன்..
(பாதுகாப்புக் காரணங்களால்
 இடத்தைக் குறிப்பிட முடியாது)

3 வதாய் அவன்...
பெர்க்கிலியில் ஒரு மாணவன் ..

4 வதாய் அவன்
ஜார்ஜியாவில் ஒரு குடிகாரன்..

5 வதாய் அவன்
அலாஸ்காவில்
எஸ்கிமோக் குழந்தைகளுக்கு
ஆசிரியன்..

6 வதாய் அவன்
சியர்ராவில் எங்கோ
மெலிதாய்ப் பேசும்
தலைவன்

7 வதாய் அவன்
உலவி அசைந்தாடும்
கிலுகிலுப்பை ..

10 வதாய்
100 வதாய்
1000 வதாய்
நானாயிருக்கப் போதவில்லை
எனக்கு..
எல்லோராகவும் வேண்டும் நான்..

எல்லாப் படைப்புமே
தன் மாதிரி ஒன்றைக்
கொண்டிருக்கிறது ..

ஆயின்
கடவுளின் கார்பன் தாளோ
வேறுபட்டிருக்கிறது..

அவனது
'சொர்க்கம் வெளியீட்டு நிறுவனத்தில்'
தயாரான
தனித்த வகை மாதிரி நான்..

ஆனால்
அதே கடவுளின்
சீட்டுகளைக் கலைத்துத்
திகைக்க வைப்பேன்..

என்
இறுதி நாட்களில்
ஆயிரமாயிரம் பிரதிகளாயிருப்பேன்..

பூமியின் ரீங்கரிப்பு
என்னோடிருக்கும்..

எனதேயான உலகம்
கணணிகளைத் திணற வைக்கும் ..

தடைகள் அனைத்திற்கும்
எதிராய் நான்
போரிட வேண்டும்..

மனிதம்
தீர்ந்து போன நிலவாய்
இரவில் மரித்து-
ஒளிரும் சூரியனாய்
உயிர்த்தெழுந்து கொள்கிறது..

இறந்தால்
பிரான்சிலோ
இத்தாலியிலோ
போட்டு விடாதீர்கள் என்னை..

என் தேசத்தில்
சைபீரிய மண்ணில்
இன்னும் பசுமையாய்
ஓங்கி நின்றிருக்கும்
மலைச் சரிவில்
புதையுங்கள்
இந்தக்
கிராமவாசியை..

அங்குதான்
அவன் எல்லாருமாக ஆனான்..!

                
                                                  -  எவ்கனி எவ்துஷேன்கோ




.