Friday, May 17, 2013

சூடு தணியாத கவிதை..! - பாப்லோ நெரூதா

   ..அன்றுதான் என்னை
வந்தடைந்தது கவிதை..

எங்கிருந்து எனத் தெரியாது..

கூதல் பொழுதிலிருந்தா..?
ஏதேனுமொரு நதியிலிருந்தா..?
எப்பொழுது..?

குரல்களாக
வார்த்தைகளாக
மௌனங்களாக
எவையாகவும் இல்லை அது..

தெருவொன்றில்
இரவின் கிளைகளிலிருந்து
பெருந்தீயுடன் சேர்ந்துகொண்டு
வந்து
முகமற்ற என்னைத்
தொட்டது அது..

என்ன சொல்வதெனத்
தெரியவில்லை எனக்கு..

உச்சரிக்க
ஒருபெயருமில்லாத வாயுடன்
கண்ணிழந்தவனாக
நின்றிருந்தேன்..

என்
ஆன்மாவிலிருந்து புறப்பட்டது
ஏதோவொன்று..

சிறகுகள் துறந்து
சூடுதணியாமல் வந்திருந்த
அதனைத்

தேர்ந்துகொண்ட ஒரு
தனி வழியில்
கையகப் படுத்தினேன்..

பிறகு
மிகுந்த வலியுடன் எழுதினேன்
முதல் வரியை..

வலியா
அறியாமையா
அசலான விடுதலையா
இல்லை
ஏதுமில்லாத ஒன்றா..
எதை எழுதினேன்..?

தளையிலாத சொர்க்கமும்
கோள்களும்
என் கண் முன்னே
விரியக் கண்டேன்..

கனித் தோட்டங்கள்
கனிந்த நிழல்கள்

அம்புகளும் நெருப்பும் மலர்களும்
சூடிய மர்மங்கள் கண்டேன்..

பின்னும் இரவுகளையும்
பிரபஞ்சத்தையும்தான்..

தாரகை சூழ்ந்த வான்பரப்பில்
முடிவிலியாய் ஆனேன் நான்..

மர்மத்தின் நிழலாய்
பாதாளத்தின் ஒரு
களங்கமில்லாச் சிறு துளியாய்
மாறினேன்..

நட்சத்திரங்களோடு
பயணித்தேன்..

காற்று வெளியில்
உடைந்த என் இதயம்
நழுவிக் கொண்டிருந்தது..!


No comments:

Post a Comment