Saturday, October 2, 2010

உலகைக் குலுக்கிய 5 நிமிடங்கள்

    செவரின் சுசுகி -கனடா நாட்டைச் சேர்ந்த பெண்.1992 ரியோ டி ஜெனிரோவில் புவி உச்சி மாநாடு நடந்த போது ,அதில் சிறப்புப் பங்கேற்று 5 நிமிடங்கள் உரையாற்றினார்.அப்போது அவரின் வயது 12
     
    உலகமே திரண்டிருந்த அவையில் அந்தச் சின்னஞ்சிறுமியின் குரல் சற்றே வேறுபட்டு ஒலித்தது.சூழலியச் செயல்பாட்டாளர்கள் அனைவருடைய மனசாட்சியின் வெளிப்பாடாக அந்த  உரை அமைந்திருந்தது.அன்று எழுப்பப் பட்ட கேள்விகளில் பெரும்பாலானவை 20 ஆண்டுகள் கடந்த பின்னும் அப்படியே இருக்கின்றன-செயல்பாடுகளை வேண்டி .
       The girl who silenced the world for 5 minutes -என உங்கள் கணினியின் youtube இல்இருந்து  இதைப் பதிவிறக்கிக் கொள்ளலாம் .

        வணக்கம் . என் பெயர் செவரின் சுசுகி.சூழல்சார் குழந்தைகள் நிறுவனத்தின் (Environmental Children Organization) சார்பாகப் பேச வந்திருக்கிறேன்.கனடா நாட்டைச் சேர்ந்த என் வயதொத்த நான்கே பேர் கொண்ட அமைப்புதான் எங்களுடையது.
       
          நாங்களே திரட்டிய பணத்தைக் கொண்டு 6000 மைல்கள் தாண்டி இங்கு வந்திருக்கிறோம் 

        உங்கள் வழிமுறைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.ஒளிந்திருக்கும் நிகழ்ச்சி நிரல் ஏதுமில்லை என்னிடம்.எனது எதிர் காலத்திற்காக நான் போராடுகிறேன் .எதிர்காலத்தை இழப்பது  என்பது , ஒரு தேர்தலில் பெறுகின்ற தோல்வியைப் போலவோ,பங்குச் சந்தையில் சில புள்ளிகளை இழப்பது போலவோ அல்ல.

        இனி வரும் தலைமுறைகளுக்காக நான் பேசுகிறேன்.வறுமையின் பிடியில் உள்ள ,உலகக்  குழந்தைகளின் கேட்கப்படாத அழுகுரலின் சார்பாகப் பேச விரும்புகிறேன்.வாழிடம் தொலைத்து மாயும் எண்ணற்ற விலங்குகளுக்காகவும்தான்.

       சூரிய ஒளியில் வெளியில் செல்லப் பயப்படுகிறேன்-ஓசோன் ஓட்டைகள் காரணமாக.சுவாசிக்கவும் பயம்தான்-காற்றில் என்னென்ன வேதிப் பொருள்கள் இருக்குமோ?சில ஆண்டுகளுக்கு முன்பு எனது சொந்த ஊரான வான்கூவரில் ,என் தந்தையுடன் மீன் பிடிக்கச் சென்ற போது ஒன்றைக் கண்டேன்.நதி முழுதும் நோயுற்ற மீன்கள்.
      
      இப்போது கேள்விப் படுகிறோம்,ஒவ்வொரு நாளிலும் ஏதோ ஒரு தாவரம் அல்லது விலங்கு முற்றாக அழிந்து வருவதாக.

      கூட்டம் கூட்டமாகத் திரியும் வன விலங்குகள் ,அடர்ந்த கானகம் ,பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் பறந்து திரியும் மழைக் காடுகள் - இவையெல்லாம் எனது வாழ்வின் கனவாய் இருந்தன .ஆனால்,இவற்றை ஏன் குழந்தைகளாவது காண்பார்களா எனச் சொல்ல முடியவில்லையே ! 
      
      உங்களுக்கும் என் வயதில் இது போன்ற கவலைகள் இருந்திருக்குமா?


      எல்லாம் நம் கண்ணெதிரே நடந்து கொண்டிருக்கின்றன.நேரம் இருந்தும் ,தீர்வுகள் வைத்திருந்தும் நம்மால் செயல் படத்தான் முடியவில்லை.


     நான் குழந்தை மட்டும்தான்.என்னிடம் தீர்வுகள் இல்லை.தெரிந்த நீங்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்.




      ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டைகளை அடைப்பது எப்படி என உங்களுக்குத் தெரியாது ;இறந்துபோன நதியொன்றில் சால்மன் மீன்களைத் திரும்பக் கொண்டு வரவும் முடியாது. முற்றாக அழிந்து விட்ட ஒரு விலங்கையும்தான்.தற்போது பாலைவனமாய் மாறி விட்ட ஓர் அழகிய காட்டை?


     அப்படியானால் இவற்றை ஏன் அழிக்கிறீர்கள் ? நிறுத்துங்கள் அனைத்தையும்.


      இங்கு பலர் வந்திருக்கிறீர்கள் - அரசுகளின் பிரதிநிதிகளாக ,தொழில் சார்ந்தோராக ,நிறுவனங்களின் சார்பாக ,பத்திரிகையாளர்களாக , அரசியல்வாதிகளாக.ஆனால் ,உண்மையில் ,தாயாக,தந்தையாக,சகோதர சகோதரிகளாக,அத்தை,மாமன்களாகவும்தானே நீங்கள் எல்லாரும் இருக்கிறீர்கள்?யாருக்காவது குழந்தைகளாகவும்தானே.


      நான் குழந்தைதான்.ஆனால் 500 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தின் ஓர் அங்கம். 3 கோடி உயிரினங்களில் ஒன்று. எவ்வித எல்லைகளும் அரசுகளும் இதை மாற்ற முடியாது.ஒரே உலகின் உறுப்புகளாக ,ஒரே இலக்கை அடைய ஒன்றிணைந்து செயல்படுவோராக நாம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.


      கோபத்துடன் சொல்வதென்றால் , நான் பார்வையிழந்தவளில்லை. உலகைப் பற்றி உணர்ந்ததைச் சொல்வதில் அச்சமில்லை எனக்கு.எங்கள் நாட்டில் நாங்கள் நிறைய வீணாக்குகிறோம்.வாங்கிக் குவிப்பதும் , தூக்கி எறிவதும் எமக்குச் சாதாரணம்.தேவைக்கு அதிகமாக இருந்தாலும் செல்வங்களை இழக்க நாங்கள் தயாரில்லை.


      கனடாவில் எங்களுக்கு உணவு, தண்ணீர், இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு ஒரு குறையும் இல்லை.கடிகாரங்கள், மிதிவண்டிகள், கணினி, தொலைக் காட்சிப் பெட்டிகள் எல்லாம் உண்டு.


       இரண்டு நாட்களுக்கு முன்பு ,இங்கே பிரேசில் நாட்டில் , தெருக்களில் வாழும் சில குழந்தைகளோடு உரையாடிய போது அதிர்ச்சியடைந்தோம் .அதில் ஒரு குழந்தை சொன்னது இது: 'என்னிடம் நிறையப் பணம் இருந்திருந்தால் தெருக்களில் வாழும் குழந்தைகள் எல்லாருக்கும் உணவு, துணி, மருந்து ,இருப்பிடம், அன்பு,பாசம் ஆகியவற்றைத் தந்திருப்பேன்.['


       தெருவில் வாழும் குழந்தை ஒன்று ,தன்னிடம் இல்லாததைக் கூடப் பங்கிட விரும்புகிறது.நம்மால் முடியாதா? பேராசையைக் கைவிட முடியாதா? என் வயதுள்ள இந்தக் குழந்தைகள்தான் நீங்கள் பிறந்த இம்மண்ணில் அளப்பரிய மாற்றங்களைக் கொண்டு வரப்  போகிறார்கள்.


       நானும் அவர்களில் ஒருத்தியாக இருந்துவிடக் கூடும்.ரியோ நகரில் தெருக்களில் வாழ்பவளாக - சோமாலியாவில் வறுமைக்குப் பிறந்தவளாக -மத்தியக் கிழக்கு நாடுகளில் போரில் பாதிக்கப் பட்டவளாக - இந்தியாவில் பிச்சை எடுப்பவளாக 


         போருக்குச் செலவிடப் படும் தொகையை வறுமை ஒழிப்பிற்காகவும் ,சுற்றுச் சூழல் மேம்பாட்டிற்காகவும் செலவிட்டால் என்ன?


         எவ்வளவு அழகிய உலகம் இது?


         எங்களைப் பள்ளியில் இருந்தே சொல்லிக் கொடுத்து வளர்த்தீர்கள் -இந்த உலகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று. சண்டை பிடிக்கக் கூடாது என்றும், கூடியிருக்க வேண்டும் என்றும் , பிறரை மதித்து வாழ வேண்டும் என்றும், உணவுக் கூடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பிற உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும், பகிர்ந்துண்ண வேண்டும் என்றும், பேராசை கூடாது என்றும் எவ்வளவு புகட்டியிருப்பீர்கள் .


         செய்யக் கூடாது என்று எமக்குச் சொன்னவற்றை எல்லாம் நீங்கள் ஏன் செய்கிறீர்கள்?


        இந்த மாநாட்டில் பங்கேற்பதும், இதற்காகப் பங்களிப்பதும் உங்களது குழந்தைகளான எங்களுக்காக என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.எவ்விதமான உலகில் நாங்கள் வளர வேண்டும் என்பது உங்கள் முடிவில்தான் இருக்கிறது.


       'எல்லாம் சரியாகி விடப் போகிறது - இயன்ற அனைத்தையும் செய்வோம் - இது உலகின் கடைசித் தருணம் அல்ல '- எனப் பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்குத் தைரியமாகச் சொல்லும் நிலை வர வேண்டும். 


      உங்கள் பணிகளின் முன்னுரிமையில் எங்களுக்கு இடம் இருக்கிறதா என்று எமக்குத் தெரியாது.என் தந்தை அடிக்கடி சொல்வதுண்டு :' நீ பணிகளைச் செய்வதற்குத்தான் இருக்கிறாய் ;பேசுவதற்காக மட்டும் அல்ல'


      நல்லது.இரவில் தூக்கத்தில் நான் அழும்போது நீங்கள் சமாதானப் படுத்துங்கள்.என் மீது பாசம் இருப்பதை உணர்த்துங்கள்.


     உங்கள் செயல்பாடுகள் எல்லாம் , உங்கள் வார்த்தைகளைப் பிரதிபலிக்கட்டும்.செவிமடுததமைக்கு நன்றி.
        
  
இங்கும் காணலாம் 

2 comments:

  1. அருமையாக வந்துள்ளது.

    -பழ.சந்திரசேகரன்

    ReplyDelete