Monday, September 27, 2010

ஓய்வூதியர் எஸ்.வி.ஆர்.

        தமிழ்ச் சிந்தனை உலகில் தனது அறிவுத் தடத்தை அழுத்தமாய்ப் பதித்துக் கொண்டிருக்கும் ஒரு பேருருவை அரசாங்க மொழியான ஓய்வூதியர் என்று விளிப்பதால் ஒரு மாற்றும் குறைந்து விடாது .எனினும் பொறுத்துக் கொள்க.
        அரசின் கைக் கருவியான எமக்கு எவரும் ஒன்றே . ஆண்டியும் ,அரசனும் ;அறிஞனும் அசடனும் . ( ரம்பைக்கு நன்றி ) ஒன்றே போல் தெரிந்தாக வேண்டும்.அரசாங்கம் தர வேண்டியது என்னென்ன என்ற கணக்குச் சீட்டு அசடனிடம் இருக்கும்.அறிஞனிடம் இருக்காது.
         கோவை ஞானியும் ,பெருங் கவிஞன் புவியரசுவும் தமது முதல் ஓய்வூதியத்தைப் பெறச் சென்ற போது கொண்டாடி வரவேற்க அந்த அலுவலகத்தில் கற்றறிந்த அதிகாரிகள் எவருமில்லை. கே.பழனிச்சாமி,எஸ்.ஜெகநாதன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அவர்கள்.அவ்வளவுதான்.
         காசோலைப் பிரிவில் தரப் பட்ட காசோலையைத் தொகை எவ்வளவு என்று கூடப் பார்க்காமல் உடன் வந்திருந்த தத்தமது வாழ்வுத் துணையரிடம் கொடுத்து விட்டு உரையாடலுக்காகத் தேநீர்க் கடைக்குச் சென்று விட்டவர்களை எவர் கவனித்திருப்பார்கள்? {அந்தக் காசோலைகளைத் தேதி மற்றும் இன்ன பிற குறிப்புகளுடன் ஒப்படைத்து அவர்களுடன் தேநீர் குடிக்கவும், உரையாடவும்  சென்றவன் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் }
         அதே போன்றதொரு அனுபவம் அண்மையிலும் ஏற்பட்டது . சென்னையில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பெரியவர் , இனி மேல் அதனைத் தமது வாழ்விடமான கோத்தகிரியில் பெற்றுக் கொள்ள விரும்புவதால் உரிய பதிவேடுகள் வந்ததும் உதவுக என்ற வேண்டுகோள் ஒரு நண்பரிடம் இருந்து அலைபேசி வழி வந்திருந்தது.
        பெரியவர் பெயர் எஸ்.மனோகரன்.சின்கோனா என்ற துறையில் உயர் பதவியில் இருந்தவர்.அந்தத் துறை மூடப் பட்டு விட்டதால் பணியாளர்கள் வேறு துறைகளுக்கு அனுப்பப் பட்டனர் .ஆனால் இவரோ அதை விரும்பாமல் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டவர் . இவை எல்லாம் அவரது பதிவேடுகளில் இருந்தன.
        அழைத்து வந்தவர் ஒரு சமூக ஆர்வலர்.உதவ முடியுமா -இவர் ஓர் எழுத்தாளர் என்றார் அவர்.பெயரைக் கேட்ட பொழுது சொன்னார்-ராஜதுரை என்று.எஸ்.வி.ஆரா என வினவியதும் ,எழுந்து நின்றதும் ஒரே கணத்தில்.
       1987 வாக்கில் சென்னையில் நண்பன் சக்தி முத்துக் குமாரின் அறையில் தங்கியிருந்த போது எங்களால் பேசப் பட்ட புத்தகங்களில் ஒன்று EXISTENTIALISM. அதன் ஆசிரியராக அறிமுகம் ஆகியிருந்த பெயர் அது .
      இந்து -இந்தி -இந்தியா என்றும் ,1947 என்றும் , பெரியார் -சுயமரியாதைச் சமதர்மம் என்றும் [திருமணப் பரிசாக நண்பர்கள் பலருக்கு வழங்கிக் கொண்டிருந்த நூல் ] தொடர்ந்து கொண்டிருந்த அவரின் எழுத்துகளின் பால் ஈர்ப்பு கூடிக் கொண்டே இருந்தது.சிந்தனையைத் தூண்டும் எழுத்துகள் . ஒருமையை , செயற்பாட்டை வேண்டி நிற்பவை.சந்தித்தால் கேட்பதற்கும் கேள்விகள் நிறைய இருந்தன.
       உயிர் எழுத்து-ஜூலை 2010  இதழில் "இந்தியாவில் கொலம்பஸ் " என்ற தலைப்பிட்ட அவரின் அண்மைய கட்டுரை முக்கியமானது.வடமாநிலங்களில் பசுமை வேட்டை என்ற பெயரில் நடந்து வரும் அராஜக நிகழ்வுகளின் பின்னணியைத் தெளிவாக அதில் தந்திருக்கிறார்.அதே போல் தலித் முரசில் வெளியான போபால் கொடுமரணங்கள்,நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றி விளக்கும் கட்டுரையும் முக்கியமானதே.உடல்நலம் பாதிக்கப் பட்டும்  ,பயணங்களைக் குறைத்துக்கொண்டிருக்கும் நோயாளி மனிதராகவும் இருந்த அவரிடம் கேட்க வேண்டியிருந்த கேள்விகள் அனைத்தையும் பதுக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று .
       குறைந்து கொண்டிருக்கும் கண் பார்வையுடன் கணினியுடன் போராடிக் கட்டுரைகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.நண்பர்கள் உதவுகிறார்கள்.துணைவியார் கடிந்து கொண்டிருக்கிறார்.பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது .
       கடந்த காலம் குறித்த எவ்விதக் குற்றச்சாட்டுகளோ ,அதிருப்தியோ இல்லை அவரிடம்.வீட்டில் தங்கியிருந்து சமூகம் சார் விவாதங்களில் ஈடுபட்ட நண்பர்களின் மீது இன்னும் அளவிறந்த அன்பு அவருக்கு.இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்ததால் ஏற்பட்டிருக்கும் மருத்துவ அசௌகரியங்களைச் சொன்னார்.நடமாட்டம் சுருங்கிக் கூடுதலாகிவிட்ட கவனங்களைப் பற்றியும் பேசினார்.உடல் நலக் குறைவு தனது நட்பு வட்டத்திற்குத் தெரியப் படாமல் இருப்பதை விரும்புகிறார்.
       தராசின் முள் போல் இருந்து ,மதிப்பீடுகளை வழங்கிக் கொண்டிருப்பவர் ,சமரசமற்ற எழுத்து முன்னோடி.விரிவாகப் பேச இனி ஒரு நேரம் கிடைக்க வேண்டும்.
       ஓய்வூதியம் மாற்றம் செய்து காசோலையை ஒப்படைத்த பின்,அந்தப் பூஞ்சை உடம்பைக் கைத்தாங்கலாக அழைத்துப் போய் வாகனத்தில் அமர வைத்து அனுப்பி வைத்தோம்.
      "எதையும் கேட்கத் தோன்றவில்லை
        அவரும்
        புன்னகைத்துப் போய்விட்டார் "
         -என்ற கவிதை நினைவுக்கு வந்தது.

                                       -----   --------   ----

No comments:

Post a Comment