Friday, August 2, 2013

அழகிய(ர்) சென்னை..!

..கடுமையான கோடையின் தொடக்கத்தில் சென்னை வந்து சேர்ந்தேன்.உயர்பதவியின் மீதான பணியிட மாறுதல் வரவழைத்திருந்தது.
  தங்குமிடத்தில் இருந்து கிளம்பிப் பேருந்து,ரயில்நிலையம் வருவதற்குள் சட்டை நனைந்துவிடும்.மக்கள்வெள்ளத்தில் நீந்தி அலுவலகம் நுழையும்போது உடம்பு முழுதும் கசகசக்கும்.பகலில் வெளியே நடமாட முடியாது.ஒரு பச்சைமரம் கண்ணுக்குத் தெரியாது.வியர்வை ஊற்றிக்கொண்டேயிருக்கும்.
  ஆனாலும் அவசர அவசரமாக் நடந்துகொண்டேயிருக்கிற மனிதரை எங்கும் பார்க்க முடியும்.யாராருக்கு என்ன வேலைகளோ..?
  வெயிலை வெல்லப் பல வழிகளை வைத்திருக்கிறார்கள் சென்னை மக்கள்.குறிப்பாகப் பெண்கள்.உடல் முழுவதையும் மறைத்துக் கொள்ளும் உடைகளை அணிந்துகொள்கிறார்கள்.கண்ணுக்குக் குளிர்கண்ணாடி.’தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி - பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்’ எனப் பாரதி பாடியதை அவர்கள் நினைவுபடுத்துவார்கள்.
  ஆயினும் உஷா ராஜேந்தர் மாதிரி  சமூக சேவகியோ,ரேகா மாதிரி பருத்திப்புடைவை டீச்சரோ எவரும் கண்ணில் பட்டாரில்லை என்பது ஒரு துக்கம்.
  சாலையோரத்தில் இளநீர் வண்டிகள்,முலாம்பழம்,சாத்துக்குடிச் சாறு பிழிந்து தரும் தற்காலிகக் கடைகள் எனக் கூட்டமாயிருக்கும்.ஆயினும், இந்த வேகாத வேனலில் சிலர் கரும்புச்சாறும் சுக்குக்காபியும் குடித்து நம்மைக் கலவரப் படுத்துவார்கள்.பப்பாளி,வெள்ளரி,அன்னாசிப்பழங்களை வசதியான வடிவில் வெட்டி ஞெகிழிக்கோப்பையில் அடைத்து விற்பதை வாங்கி மர்ப் பல்குச்சி உதவியுடன் கொரித்துக் கொள்கிறார்கள்.
  இவை எல்லாவற்றையும் விட வெயிலைச் சமாளிப்பதற்குக் குளிர்ந்த தண்ணீர் போதும் என்பது நம் கட்சி.ஆதரவு அதிகம் இல்லாத கட்சி.எம் அலுவலகச் சன்னலோரம் கொஞ்சம் கடற்காற்று வரும்.அங்கே போய்ச் சிறிதுநேரம் நின்றுகொள்வது ஆறுதலாயிருக்கும்.
  அப்படியாக வெயிலோடு விளையாடி,உறவாடி,ரொம்பத்தான் வாடியும் வதங்கியும் போன ஒரு நல்லிளம் பகல் வேளையில் ஒரு பெண்ணைக் கண்டேன்.தள்ளுவண்டியில் ஒரு பெரிய அண்டா,அதனருகே உப்பு,மிளகாய்ப்பொடி தூவிய மாங்காய்த்துண்டுகள்,மோர்மிளகாய்,கொத்தவரை வத்தல் எல்லாம் தனித்தனித் தட்டுகளில் வைத்திருந்தார் அவர்.ஒரே அளவிலான தண்ணீர்ச் செம்புகளும் பக்கத்தில் குப்புறக் கவிழ்த்து வைக்கப் பட்டிருந்தன.
  நெருங்கிப் போய் ‘என்னக்கா இது..?’எனக் கேட்டேன்.தலையை உயர்த்திப் பார்த்து ‘கேப்பைக்கூழ்..குடிக்கிறியா..?’ என்றார்.கம்மங்கூழை எதிர்பார்த்திருந்தேன்.ராகி என அறியப்பட்டிருந்த கேவுறு,சீயம்,கேப்பை என்றெல்லாம் பேர்கொண்ட அந்தப் புன்செய்ப்பயிர் விளையும் வானம்பார்த்த பூமிகள் நினைவுக்கு வந்தன.
  எங்கள் ஊரிலும் சோளம்,ராகி,தட்டைப் பயறு (காராமணி என்பார் தெற்கத்தியர்),உளுந்து,கம்பு,நரிப்பயறு  எல்லாம் விளைந்து வந்தன.சோளக் காட்டில் ஊடுபயிர் தட்டையும்,நரிப் பயறும்தான்.இவை அனைத்தையும் உப்பு மட்டும் சேர்த்து அவித்தோ,அப்படியே அனலில்வாட்டியோஉண்ண முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
  கேப்பைக்கூழ் நன்றாயிருந்தது.தொட்டுக்கொள்ள உப்புமிளகாப்பொடி சேர்த்த மாங்காய்த்துண்டுகளை ஒரு தட்டில்வைத்துத் தந்தார் அவர்.வேண்டாம் என மறுத்துவிட்டேன்.’சும்மா சாப்டு’-என வற்புறுத்தியதால் அந்த ரகசியத்தைச் சொல்லவேண்டியதாயிற்று.குருதியழுத்தம் இவற்றை அனுமதிக்காது என்பதை.ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டார் அவர்.
  அடுத்த நாளும் போனேன்.இம்முறை கூழ்தரும் செம்பை இன்னொருமுறை கழுவி எடுத்து ஊற்றித்தந்தார்.நான்பாட்டுக்குக் குடிக்க ஆரம்பித்தபோது ‘ இந்தா சார்..’ என்றார். கையில் இருந்த தட்டில் அவித்த வேர்க்கடலை.கிள்ளிப்போட்ட பச்சைமிளகாய்த் துண்டுகள் அதன்மேல் அமர்ந்திருந்தன. ‘என்னக்கா இது .?’ என்றேன்.’நீதான் எங்க சேர்வையச் சாப்ட மாட்டன்றியே..ஒனக்காக அவிச்சகடல வாங்கிவெச்சேன்.உப்பு இருக்காது.புடிச்சா பச்சமொளகா இருக்கு.தொட்டுக்க..’ என்றார்.
  ஒரேயொரு பத்துரூபாய் வியாபாரத்தில் இப்படி அன்பையும் சேர்த்து அடைத்துத் தரமுடியுமா..தன் காட்டில் விளைந்த கம்பு,வேர்க்கடலையை மூட்டைகட்டிக் கொண்டுவரும் எங்கள் ஏழூர் அத்தை நினைவுக்கு வந்தார்.
  எண்ணெய்த்தலை,வெற்றிலை வாய்,கறுப்புப்பாசிக் கழுத்து,மாம்பழ நிறச் சேலையுடன் எளிய உருவத்தில் இருந்த அவர்,சென்னை மாநகரத்து அழகியரில் ஒருவராய்த் தெரிந்தார்.




   

2 comments:

  1. Really heart touching avai anna. Your words are formation always excellent na. You can only express this type of feelings in the fastest world.

    ReplyDelete