Sunday, August 18, 2013

..சரியான எம்டன் தானப்பா..!

    ‘எம்டன் குண்டு விழுந்த இடம் உஙக  ஆபீஸ் பக்கத்தில்தானே..போய் ஒரு எட்டுப் பாத்துட்டு வந்தீங்களா..?’-என்றிருந்தார் துரை பாஸ்கரன் அண்ணன்.போனேன்.கூப்பிடுதூரத்தில் உள்ள பாரிமுனைக்கருகே உயர்நீதிமன்ற வெளிச்சுவரோரம் அந்த நிகழ்வுக்கான அடையாளம் கல்வெட்டாய்ப் பொறிக்கப் பட்டிருக்கிறது.
    பார்த்துத் திரும்பியதும் அந்தச் சரித்திர சம்பவம் நினைவில் ஓடத் தொடங்கியது.
    அதிகாரப் பங்கீட்டுக்க்காக வல்லாதிக்க நாடுகள் ஆலாய்ப் பறந்து முதல் உலகப்போருக்குக் காரணமாகின.கடல்வணிகத்தில் கெட்டிக்காரன் எவனோ அவனே உலகின் சின்னஞ்சிறு நாடுகளைப் பிடிக்கவும் அங்குள்ள செல்வங்களைச் சுரண்டவும் தலைப்பட்டான்.பொழுதுபோக்க , விடுமுறையைக்கொண்டாட அவனுக்குப் புதிய இடங்கள் கிட்டின.மண்ணாசை போதையாய்க் கிறங்கடிக்க உலகைச் சுற்றிச் சுற்றி வந்தான்.தனித்தும் ,கூட்டுச் சேர்ந்தும் தன்னைப் பெரும் சக்தியாய் மாற்றிக்கொண்டான்.
    சூரியன் மறையாத பிரித்தானியப் பேரரசுக்குப் புதுப்புது அடிமை நாடுகள்  கிடைத்தன.சிறுநாடுகளைப் பிரான்சு, ஸ்பெயின்,போர்ச்சுகல் போன்றவை பங்குபோட்டுக் கொண்டன.
   ஜெர்மனியும் இந்தப்போட்டிக்கு  வரிந்துகட்டிக் கொண்டு வந்து நின்றது.சீனத்தின் ஒரு சிறுபகுதியை அது கையகப்படுத்தி வைத்திருந்தது என்றால் நம்ப முடிகிறதா..ஆனால் அது உண்மைதான்.கொஞ்சம் மாத்தி யோசித்த ஜெர்மனி ஒன்றைச் செய்தது.உலகின் துறைமுக நகரங்களில் நடக்கும் வணிகத்தைத் தகர்ப்பதன்மூலம் கடல்புரங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எண்ணியது.இதற்கான திட்டம் ஒன்றையும் தீட்டியது.ஊர்மெச்சும் தனது எந்திரத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திப் புதிய போர்க்கப்பல்களை உருவாக்கத் தொடங்கியது.
    1908-ஆம் ஆண்டு  அது உருவாக்கிய போர்க்கப்பல்தான் ’எம்டன்’.தனது நாட்டின் துறைமுக நகரம் ஒன்றின் பெயரைத்தான் அதற்கு வைத்து மகிழ்ந்தார்கள் அவர்கள்.துணிவும் தந்திரமும் கொண்ட வான் முல்லர் என்பார் அதன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.தனது ஆதிக்கத்தின் கீழிருந்த சீனப்பகுதியான கியசாவ் என்ற இடத்திலிருந்து பயணத்தைத் தொடங்கியது ஜெர்மானிய எம்டன்.
    வணிகக்கப்பல்களைத் தகர்ப்பதும் அவற்றிலுள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதும் அதன் வேலையானது. துறைமுக நகரங்களைக் குண்டுவீசித் தகர்ப்பது கூடுதல் பணி.
    செப் 10 தொடங்கி நவ 9 வரை இரண்டே மாதங்களில் உலகக் கடல்வணிகத்தைப் படாதபாடு படுத்தி விட்டது இந்தக் கப்பல்.24 கப்பல்களை மூழ்கடித்தும், 10 மில்லியன் டாலர் வரை சேதப்படுத்திவிட்டும்தான்   ஓய்ந்தது அதன் பயணம்.
    1914-ஆம் ஆண்டு.இந்தியப் பெருங்கடல் அற்றை நாளில் ’ஒரு பெரிய பிரிட்டிஷ் ஏரி’ என்றே அழைக்கப்பட்டது.துறைமுகங்களும், வணிகச் சந்தடியும் இந்துப்பெருங்கடற்பரப்பைக் கண்ணயராப் பகுதியாக மாற்றியிருந்தது.இந்தக் கலகலப்பைச் சிதைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் கடலில் ஏதோ ஒரு பகுதியில் வட்டமிட்டுக் கொண்டிருந்த எம்டனை சென்னைத்துறைமுகத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை.
    செப் 1ஆம் தேதி எம்டன் சென்னையை நெருங்கிவிட்டது என்ற தகவல் கிடைத்ததும் ஆயிரக் கணக்கில் இரவோடிரவாக ஊரைவிட்டு ஓடிப்போனவர்களும் உண்டு.பிரிட்டிஷ் அரசை ஜெர்மனி வென்றுவிட்டால் தனது புதிய முதலாளியின் காலடியில் பத்திரமாக இருக்க ஜெர்மன்மொழியை அவசர அவசரமாகக் கற்றுக் கொள்ள முனைந்தவர்களும் உண்டு.
    இந்தியப் பெருங்கடலைப் பீதிக்குள்ளாக்கிக் கொண்டிருந்த இந்தக் கப்பலால் அதன் முக்கியக் கடல்வழியான கொழும்பு-சிங்கப்பூர் வழி சந்தடியற்றுப் போனது.பயத்தில் கப்பலகள் சரக்குடன் துறைமுகங்களிலேயே காத்துக் கிடந்தன.காப்பீட்டுத்தொகை எகிறிக்கொண்டிருந்தாலும் வெளியே கொண்டுவர எந்தக் கம்பெனிக்கும் துணிவு வரவில்லை.
    ஒரேயொரு போர்க்கப்பல் தன் சாம்ராஜயத்தையே கேலிக்குரியதாக்கிக் கொண்டிருப்பதைப் புரிந்துகொண்ட பிரிட்டிஷ் அரசு துணைகளைத் தேடத் தொடங்கியது.சில நாட்களில் பிரிட்டிஷ்,பிரெஞ்சு,ஆஸ்திரேலிய, ரஷ்யப் போர்க்கப்பல்கள் எம்டனைச் சுற்றிவளைத்தன.ஆனால், நடந்தது வேறு.அத்தனை கப்பல்களையும் ஓடஓட விரட்டியடித்துச் சிதைத்தது எம்டன்.
    செப்22-ஆம் நாள்.இந்தியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு மூலையை எட்டிய அது  சென்னையை நோக்கி விரைந்தது.எம்டன் எங்கே வரப்போகிறது என்ற அசட்டையை அது நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது.
    இரவு 9.30 மணி.வங்கக்கடலில் 3000 கஜதூரத்தில் இருந்துகொண்டு  தனது 10.5 செ.மீ (4.1 அங்குல) எடைகொண்ட குண்டுகளைச் சென்னைநோக்கி வீசத்தொடங்கியது.துறைமுகத்தில் இருந்த பர்மா ஆயில் கம்பெனியின் கிடங்குகளின்மீது சரமாரியாக விழுந்த குண்டுகள் அதனைத் தாக்கிச் சிதைத்தன. முதல் 30 சுற்றுகளிலேயே  முற்றிலுமாகச் சேதமடைந்தன எண்ணெய்க் கிடங்குகள்.10 மணிவரை அரைமணிநேரத்திற்குள் 105 சுற்றுகள் வீசிமுடித்த பின்னர்தான் இடத்தைவிட்டு நகர்ந்தது எம்டன்.இந்தத் தாக்குதலில் 20 பேர் காயமடைந்தனர்.5 மாலுமிகள் உயிரிழந்தனர்.
    சென்னையைவிட்டு நழுவிச் சென்ற எம்டன்  அதன்பின் இந்தியப்பெருங்கடலிலேயே  வட்டமடித்து ,இலங்கையைச் சுற்றி இலட்சத்தீவுகள் வரை சென்று சிட்னியில் சுற்றிவளைக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
   சென்னைத்தாக்குதலின்போது சில குண்டுகள் உயர்நீதிமன்ற  வடக்கு நுழைவாயிலிலும் விழுந்து சுவரைச் சேதப்படுத்தியிருக்கின்றன.இன்று அந்த இடத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கல்வெட்டு மட்டும் இருந்துகொண்டு இந்தச் செய்தியைச் சொல்லிக்கொண்டிருக்கிறது.
    மறைமுகமாய்த் தீச்செயல் செய்து, அகப்படாமல் நழுவி விடுபவனைச் ’சரியான எம்டன்’ எனத் தமிழர்கள் விளிக்கும் சொலவடை அன்றுதான் தோன்றியது எனச் சொல்லவேண்டியதில்லை. 

No comments:

Post a Comment