Saturday, October 19, 2013

பாட்டுப் புஸ்தகம் ..

..`மலர்விழி நிலையம் ' என்ற பெயரில் கோவையில் ஒரு கடை இருக்கிறது. நாள் , மாத ,வருடக் காலண்டர்கள் அச்சடித்து விற்பவர்கள் அவர்கள். தவிர இன்னொன்றையும் செய்தார்கள்.தமிழ்த்திரைப்படப் பாடல்கள் அடங்கிய பாட்டுப் புத்தகங்களையும்  (எமக்கு அவை புஸ்தகம்தான் ) அச்சிட்டுத் தந்தார்கள். படத்தலைப்பை விளம்பரத்தில் கண்ட எழுத்துருவிலேயே பா.புத்தகத்திலும் காண முடிந்தது.மட்டிக் காகிதத்தில் உருவான அதன் அட்டையைத்  திறந்தால் ,முதல் பக்கத்தில் நடிகர் , நடிகையர் , தயாரிப்பு , தொழில்நுட்பக் கலைஞர்கள் - என ஒரு பட்டியல் இருக்கும். அதிலும் ஒளிப்பதிவாளர் , படத்தொகுப்பாளர் , இடம்பெற்றிருந்தார்களா  என்பது நினைவில்லை.

   அடுத்த பக்கத்தில் கதைச் சுருக்கம். இதைக் கடைசிப்பக்கம் கூட வைப்பதுண்டு. கதையின் அமைப்பைக் கூறி ,முடிவைச் சொல்லாமல் இரண்டு  மூன்று கேள்விகளால் , படிக்கும் நம்மை யோசிக்க வைத்து `மீதியை வெண்திரையில் காண்க ' எனச் சொல்லியிருப்பார்கள். விக்கிரமாதித்தன் கதையைப் படித்துப் பழகிய நாம் , நமது முயற்சியில் சற்றும் தளராமல் படத்தின் முடிவு என்னவாயிருக்கும் எனச் சிந்தித்துக் கொண்டிருப்போம். அனால், நம் முடிவுக்கு வேலையிருக்காது. ஏற்கெனவே படம் பார்த்துவிட்டு வந்த மகராசர்கள் முடிவைச் சொல்லிவிடுவார்கள்.

   புத்தகத்தில் பாட்டு தொடங்குமிடத்தில் இடப்புறம் பாடலாசிரியர் பெயர், வலப்புறம் பாடகர்கள் பெயர் என இருக்கும். இவையே இட,வலம் மாறியும் இருக்கலாம். தொகையறா, பல்லவி, அனுபல்லவி, சரணம் என அடைப்புக் குறிக்குள் சிறுதலைப்புத் தந்திருப்பார்கள்.

   வானொலியில் பாட்டைக் கேட்டு அவசர அவசரமாய் எழுதித் தனி நோட்டில் பதித்து ஆவணப் படுத்தி வைப்பதும்  உண்டு. அந்த நோட்டு ஊர்முழுவதும் உலவிக் கொண்டிருக்கும்.

     இருகூர் லட்சுமி தியேட்டர் முன்புறம் இருந்த ஜூபிலி டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்டில் டைப்பிங் வாத்தியாராக இருந்த தேவராஜ் அண்ணனின் பாட்டுநோட்டு ,என்.ஜி.ஆர்.புரம் முழுவதும் பிரசித்தம். அண்ணன் ரசனை வேறுமாதிரி.எம்.ஜி.ஆர் , சிவாஜி, பாடல்கள் இருக்காது அவர் நோட்டில். பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ .எம்.ராஜா, ஜே.பி.சந்திரபாபு, கண்டசாலா, ஜிக்கி , ஜமுனாராணி, மாதுரி, திருச்சி லோகநாதன் போன்றவர்கள் மட்டுமே அதில் இருப்பார்கள்.அவர், எங்கள் ராஜேஸ்வரி அக்காவைப் பெண்கேட்க முயன்றதும், சாதிமறுப்பு மணத்திற்குச் சம்மதிக்காத தனசேகரண்ணன் அவரைத் தனியாக அழைத்துப் பேசி (மிரட்டி) அனுப்பியதும் ஒரு சோகக் காவிய முடிவு.

   அச்சுப்பிழை என்பதை உணராமல் அப்படியே மனப்பாடம் செய்துவிடுவது என் பழக்கம். அதனாலேயே பல பிரசினைகளைச் சந்தித்ததும் உண்டு.`கருணை மழையே ..மேரிமாதா ..கண்கள் நிறவாயோ..'என்றுதான் பாடுவேன்.செண்பகவல்லியக்கா  அடிக்க வரும்.`திறவாயோ'ன்னுதாண்டா பாட்டு.. கொல்லாதடா -என்று திருத்தம் வெளியிடுவார். கேட்க மாட்டேன்.

    இந்திப்படப் பாடல்களும் புத்தக வடிவில் கிடைத்தன.அச்சுப்பிழை, எழுத்துப்பிழைகளுக்கும் அளவே இருக்காது அதில். புரியாத மொழி வேறு.மனப்பாடம் செய்யத் தோதாகவும் இல்லாமல் சோதிக்கும். `பாபி'புத்தகத்தை வைத்துக்கொண்டு பாட்டைக் கேட்க முடியாது..`மை ஷாயர் தோ நஹீன்' - என  அச்சில் இருப்பதை ஷைலேந்திரசிங், அழகாக` மே  ஷாய்ர் தோ நஹீ..என இழுத்துக்கொண்டு போய்விடுவார்.

   பாட்டுப் புத்தகங்களைத் தொகுத்துக் குமுதம் தொடர்கதைபோலப் பைண்டிங் செய்து வைப்பதும் உண்டு.ஆனால் அதில் சுவாரசியம் இருக்காது.ஒன்று, தனித்தனிப் புத்தகங்களாக இருக்க வேண்டும். அல்லது, எம்.ஜி.ஆர் காதல் பாடல்கள், சிவாஜி தத்துவப் பாடல்கள் போல ஒருபொருள் குறித்ததாக இருக்க வேண்டும்.பாடி நடிக்கும் சந்திரபாபு,எப்பொழுதும் ஸ்டார்தான்.அவர் பாடித் தொகுத்த புத்தகங்கள் கிட்டத்தட்ட எல்லார் கையிலும் இருக்கும். பி.சுசீலா , எஸ்.ஜானகி, தனிப்பாடல்கள் பெண்களுக்கானவை.அதை வைத்துக்கொண்டு தெய்வத்தின் தெய்வம்- படத்தில் வரும் `நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை 'பாடலை உருப்போட்டுக் கொண்டிருப்பார்கள் எங்கள் அக்காமார்கள்.அந்தப் பாடல் உள்ள பக்கத்தின் மேல் நுனி எப்பொழுதும் மதிக்கப்பட்டே இருக்கும்.`கன்னிமனம் உனக்கெனவே காத்திருக்குது..இன்று காவல்தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது ..-எனக் கிசுகிசுக்கும் குரல் , மாதுளஞ் செடியருகே தாமரைச் செல்வியக்காவிடம் இருந்து சோகமாய் வழிந்து கொண்டிருக்கும்.

   பல வடிவங்களிலும் வந்தன பாட்டுப் புத்தகங்கள். சதுரமாக, நீள் செவ்வகமாக , ஆல்பம் போல , இசைத்தட்டு  (இன்றைய குறுவட்டு ) போன்ற வடிவத்திலும்கூட இருந்தன. சரிகை நூலால் கட்டப்பட்ட புத்தகம் , படத்தயாரிப்பின் செல்வாக்கைச் சொன்னது.

   எனக்குப்பிடித்த பாட்டுப் புத்தகம் `பட்டிக்காட்டுப் பொன்னையா' படத்தினுடையது.எம்.ஜி.ஆர் அதில் இரட்டைவேடம்.இன்றைய முதல்வர் அதில் நாயகி. நெஞ்சுவரை எடுத்த அவரின் புகைப்படத்தை அப்படியே வைத்துப் புத்தக வடிவில் அமைத்திருந்தார்கள்.முன்புறம், சிரித்துக் கொண்டும் , பின்புறம் அளவான சிரிப்பு  மற்றும் குறுந்தாடியுடனும் மற்றவர்.உருவத்தை அனுசரித்து உள்ளே பாடல்கள் அச்சிடப்பட்டிருந்தன.

   வழமைப்படி பாடல்களை மனப்பாடம் செய்தபின் இன்னொன்றையும் செய்தேன்.நீள சைஸ் அன்ரூல்டு நோட்டின்மீது பாட்டுப்புத்தகத்தை வைத்துப்  பென்சிலால்  புத்தக ஓரத்தின்மீது கோடு இழுத்துக்கொண்டு வர , நோட்டில் எம்.ஜி.ஆரின் புறத்தோற்றம் உருவாகியிருந்தது.புத்தகத்தை எடுத்துவிட்டுக் கண், காது, மூக்கு, ஆகியவற்றைப் புத்தகத்தைப் பார்த்துப் பார்த்தே வரைந்து பார்த்தேன்.முதல் எம்.ஜி.ஆர் சரியாக வரவில்லை.அடுத்தவரை முயன்றேன்.கிட்டத்தட்ட சரியாக வந்திருக்கிறது எனத் திருப்திப் பட்டுக் கொண்ட நேரம்  `என்னடா பண்றே..? என்றவாறே வந்தார் ராஜு அண்ணன் . வரைந்ததைக் காட்டினேன்.  ஒவ்வொரு படத்தையும் பார்த்ததும் ஒரு முறை முறைப்பார் என்னை. மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் அவர்.பின்னர்,` தாடியைக் குறைச்சுக்கடா ..வாத்தியாருக்கு அம்சமாயிருக்கும்..' எனக் கூறிவிட்டுப் போனார். நிம்மதியாயிருந்தது.

   என்னிடமும் ஒரு பாட்டுப்புத்தகத் தொகுப்பு இருந்தது.நடிகர் திலகம், புரட்சித்தலைவர், மக்கள் கலைஞர், காதல் மன்னன், நவரசத்திலகம் எனப் பலரின் பாடல்களும் கலந்துகட்டி இருந்தன.பாட்டுநோட்டொன்றும் வைத்திருந்தேன். அதில் என் கையெழுத்தைப் பார்த்து எனக்கே பெருமையாக இருக்கும்.இடிகரை மணியகாரன்பாளையத்தில் அது சுற்றாத வீடில்லை.

   இசைத்தட்டுக் காலம் முடிந்து, டேப்ரிகார்டர் போய்க் குறுவட்டும், பென்  டிரைவும்  ஆட்சிக்கு வந்துவிட்ட இந்தக் காலத்தில் நான் கடைசியாக வாங்கிய பாட்டுப்புத்தகம் எதுவென யோசித்துப் பார்த்தேன்.அது இசைஞானியின் இசையில் வந்த `சின்னத்தாயி' படத்தினுடையது.


2 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete