Monday, September 27, 2010

ஓய்வூதியர் எஸ்.வி.ஆர்.

        தமிழ்ச் சிந்தனை உலகில் தனது அறிவுத் தடத்தை அழுத்தமாய்ப் பதித்துக் கொண்டிருக்கும் ஒரு பேருருவை அரசாங்க மொழியான ஓய்வூதியர் என்று விளிப்பதால் ஒரு மாற்றும் குறைந்து விடாது .எனினும் பொறுத்துக் கொள்க.
        அரசின் கைக் கருவியான எமக்கு எவரும் ஒன்றே . ஆண்டியும் ,அரசனும் ;அறிஞனும் அசடனும் . ( ரம்பைக்கு நன்றி ) ஒன்றே போல் தெரிந்தாக வேண்டும்.அரசாங்கம் தர வேண்டியது என்னென்ன என்ற கணக்குச் சீட்டு அசடனிடம் இருக்கும்.அறிஞனிடம் இருக்காது.
         கோவை ஞானியும் ,பெருங் கவிஞன் புவியரசுவும் தமது முதல் ஓய்வூதியத்தைப் பெறச் சென்ற போது கொண்டாடி வரவேற்க அந்த அலுவலகத்தில் கற்றறிந்த அதிகாரிகள் எவருமில்லை. கே.பழனிச்சாமி,எஸ்.ஜெகநாதன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அவர்கள்.அவ்வளவுதான்.
         காசோலைப் பிரிவில் தரப் பட்ட காசோலையைத் தொகை எவ்வளவு என்று கூடப் பார்க்காமல் உடன் வந்திருந்த தத்தமது வாழ்வுத் துணையரிடம் கொடுத்து விட்டு உரையாடலுக்காகத் தேநீர்க் கடைக்குச் சென்று விட்டவர்களை எவர் கவனித்திருப்பார்கள்? {அந்தக் காசோலைகளைத் தேதி மற்றும் இன்ன பிற குறிப்புகளுடன் ஒப்படைத்து அவர்களுடன் தேநீர் குடிக்கவும், உரையாடவும்  சென்றவன் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் }
         அதே போன்றதொரு அனுபவம் அண்மையிலும் ஏற்பட்டது . சென்னையில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பெரியவர் , இனி மேல் அதனைத் தமது வாழ்விடமான கோத்தகிரியில் பெற்றுக் கொள்ள விரும்புவதால் உரிய பதிவேடுகள் வந்ததும் உதவுக என்ற வேண்டுகோள் ஒரு நண்பரிடம் இருந்து அலைபேசி வழி வந்திருந்தது.
        பெரியவர் பெயர் எஸ்.மனோகரன்.சின்கோனா என்ற துறையில் உயர் பதவியில் இருந்தவர்.அந்தத் துறை மூடப் பட்டு விட்டதால் பணியாளர்கள் வேறு துறைகளுக்கு அனுப்பப் பட்டனர் .ஆனால் இவரோ அதை விரும்பாமல் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டவர் . இவை எல்லாம் அவரது பதிவேடுகளில் இருந்தன.
        அழைத்து வந்தவர் ஒரு சமூக ஆர்வலர்.உதவ முடியுமா -இவர் ஓர் எழுத்தாளர் என்றார் அவர்.பெயரைக் கேட்ட பொழுது சொன்னார்-ராஜதுரை என்று.எஸ்.வி.ஆரா என வினவியதும் ,எழுந்து நின்றதும் ஒரே கணத்தில்.
       1987 வாக்கில் சென்னையில் நண்பன் சக்தி முத்துக் குமாரின் அறையில் தங்கியிருந்த போது எங்களால் பேசப் பட்ட புத்தகங்களில் ஒன்று EXISTENTIALISM. அதன் ஆசிரியராக அறிமுகம் ஆகியிருந்த பெயர் அது .
      இந்து -இந்தி -இந்தியா என்றும் ,1947 என்றும் , பெரியார் -சுயமரியாதைச் சமதர்மம் என்றும் [திருமணப் பரிசாக நண்பர்கள் பலருக்கு வழங்கிக் கொண்டிருந்த நூல் ] தொடர்ந்து கொண்டிருந்த அவரின் எழுத்துகளின் பால் ஈர்ப்பு கூடிக் கொண்டே இருந்தது.சிந்தனையைத் தூண்டும் எழுத்துகள் . ஒருமையை , செயற்பாட்டை வேண்டி நிற்பவை.சந்தித்தால் கேட்பதற்கும் கேள்விகள் நிறைய இருந்தன.
       உயிர் எழுத்து-ஜூலை 2010  இதழில் "இந்தியாவில் கொலம்பஸ் " என்ற தலைப்பிட்ட அவரின் அண்மைய கட்டுரை முக்கியமானது.வடமாநிலங்களில் பசுமை வேட்டை என்ற பெயரில் நடந்து வரும் அராஜக நிகழ்வுகளின் பின்னணியைத் தெளிவாக அதில் தந்திருக்கிறார்.அதே போல் தலித் முரசில் வெளியான போபால் கொடுமரணங்கள்,நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றி விளக்கும் கட்டுரையும் முக்கியமானதே.உடல்நலம் பாதிக்கப் பட்டும்  ,பயணங்களைக் குறைத்துக்கொண்டிருக்கும் நோயாளி மனிதராகவும் இருந்த அவரிடம் கேட்க வேண்டியிருந்த கேள்விகள் அனைத்தையும் பதுக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று .
       குறைந்து கொண்டிருக்கும் கண் பார்வையுடன் கணினியுடன் போராடிக் கட்டுரைகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.நண்பர்கள் உதவுகிறார்கள்.துணைவியார் கடிந்து கொண்டிருக்கிறார்.பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது .
       கடந்த காலம் குறித்த எவ்விதக் குற்றச்சாட்டுகளோ ,அதிருப்தியோ இல்லை அவரிடம்.வீட்டில் தங்கியிருந்து சமூகம் சார் விவாதங்களில் ஈடுபட்ட நண்பர்களின் மீது இன்னும் அளவிறந்த அன்பு அவருக்கு.இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்ததால் ஏற்பட்டிருக்கும் மருத்துவ அசௌகரியங்களைச் சொன்னார்.நடமாட்டம் சுருங்கிக் கூடுதலாகிவிட்ட கவனங்களைப் பற்றியும் பேசினார்.உடல் நலக் குறைவு தனது நட்பு வட்டத்திற்குத் தெரியப் படாமல் இருப்பதை விரும்புகிறார்.
       தராசின் முள் போல் இருந்து ,மதிப்பீடுகளை வழங்கிக் கொண்டிருப்பவர் ,சமரசமற்ற எழுத்து முன்னோடி.விரிவாகப் பேச இனி ஒரு நேரம் கிடைக்க வேண்டும்.
       ஓய்வூதியம் மாற்றம் செய்து காசோலையை ஒப்படைத்த பின்,அந்தப் பூஞ்சை உடம்பைக் கைத்தாங்கலாக அழைத்துப் போய் வாகனத்தில் அமர வைத்து அனுப்பி வைத்தோம்.
      "எதையும் கேட்கத் தோன்றவில்லை
        அவரும்
        புன்னகைத்துப் போய்விட்டார் "
         -என்ற கவிதை நினைவுக்கு வந்தது.

                                       -----   --------   ----

Sunday, September 26, 2010

புளிய மரங்களோடு வாழ்ந்தவன்..

இனியதாய்
இருந்தது புளிய மரம்..
                                                                              
உச்சி மர அணில்
இறங்கி வரும்போது
பிடிக்கலாம் எனக் காத்திருந்தது
பள்ளிக் காலத்தில் ..

படிக்கிற பையன்கள்
ஊர் சுற்றித் திரிவது கண்டு
கோபமாய் ஓடி வந்த
சின்னம்மாவின் கையில்
புளிய விளார்.

தெருவின் மேற்புற
ரெட்டைப் புளியமரத்தில்
செருக்காய் வாழ்ந்திருந்த
பேய்கள்
ஒரு நற்காலையில்
ஓடிப் போயின -
கரண்ட் கம்பங்களில்
லைட் மாட்டிய பிறகு ..

ரயில் நிலையம் தாண்டிய
ஓடைக்கரையில்
வெங்கிச்சான் கல்லெடுத்து
வீசிய போது-
எப்போதாவது கிட்டின
புளியந் "தொவுருகள் "..

கூடியாடும்
"கொம்பேறி குழலேறிக்கு"த்
தோதான மரம்
கண்ணாடிக் காரர் தோப்பில்
தனியே நின்றது ..

பம்பரச் சாட்டை
தடிமனுள்ள வாதில்
இரு கை பற்றித்
தொங்கிக் களித்ததங்கே ..

அரை வட்ட வடிவங் கொண்ட
பிஞ்சைத் தேடி
ஊர்ந்து ஏறிடப்
பழக்கம் வந்தது..

கல்லால் கொட்டி
உப்புடன் சேர்த்து
அரைத்த விழுதை
முகங் கோணாமல்
விழுங்கத் தெரிந்தது..

லட்சுமி அக்கா கல்யாணத்தில்
நாயனம் வாசிக்க வந்த
கொண்டம்பட்டிக் காரரின்
வாசிப்பை வரவேற்கக் காத்திருந்தது
டவுசரில் மறைந்திருந்த
புளியங்காய்.

நொய்யல் ஆற்றின்
கசக் குழியில்
மாட்டிச்செத்தவன்
புளியமரத் தோட்ட
முருகேசன்.

ஓடிப் போன சிவகாமியின்
தேநீர்க் கடை
பேருந்து நிறுத்தப்
புளிய மரத்தடியில் .

இடுகாட்டுப் பேய் துரத்த
மரமெங்கும் ஆணிகள் .

மாசி பங்குனியில்
வீட்டின் முன்
விரித்த சாக்கில் காயும்
பழுப்பு நிறப் புளிக்கூட்டம்.

மரத்திற் பொறித்த
கரு நிற எண்களை
வரிசை மாறாமல் 
எண்ணிடாமல் தீராது
பேருந்துப் பொழுதுகள் ..

நிழல் கொடுத்த மரங்கள்
சாலை விரிவாகிட
உயிர் கொடுத்து வீழ்வதைக்
காணச் சகிக்கவில்லை
புளிய மரங்களோடு வாழ்ந்தவனுக்கு..
              
             ===  ============  ===



.
.
.

.




.

Friday, September 24, 2010

பெரிய சோலை ராஜு மாஸ்டர்

       ராஜு மாஸ்டர் வந்திருந்தார் .கோத்தகிரிக்கு மாற்றலாகி வந்த செய்தி கேட்டதுமே அலுவலகத்திற்கு நேராக வந்து விட்டார். குன்னூர்  கார்டைட் பாக்டரி பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பணி அவருக்கு. மண்ணின் மைந்தர். எண்பதுகளின் தொடக்கத்தில் "மதுவின் தீமைகளுக்கு" எதிரான பிரசாரம் மேற்கொண்டவர் . ஊர்த் திருவிழாவைச் சிறப்பிக்க வரும்
விருந்தினர்களுக்காகவும் ,தமது உறவினர்களுக்காகவும் காவல் துறை அனுமதியுடன் லோக்கல் சரக்கு காய்ச்சி விளம்பி மகிழும் பாரம்பரியத்தில் வந்தவர் இவர் என்பதே இதில் ஆச்சரியம்.
      ஒரு வெற்றிக் கதையின் முக்கியப் பங்காளர் என்பதால் இங்கு கவனிக்கப்பட வேண்டியவராகிறார்.
      நீலகிரியின் எழிலார்ந்த சோலைக் காடுகளுக்கு அருகிலேயே மனிதக் குடியிருப்புகளும் இருப்பதைக் காணலாம். கால்நடை வளர்ப்பும் , சிறு விவசாயமும் இவர்களின் வாழ்வு முறை. வெள்ளைக்காரன் வந்து சோலைகளைத் "திருத்தி"த் தேயிலையும் ,காப்பியும் பயிரிட்டு எரியும் பனிக்காடுகளை - பச்சைப் பாலைகளை உருவாக்கிய பின்னரும் தம் வாழிடங்களை மலைகளை விட்டு மாற்றிக் கொள்ளாதவர்கள் இவர்கள்.
      ராஜு மாஸ்டர் பழங்குடி அல்லர்.ஆயினும் மலைச் சூழலில் தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மரபுக்குச் சொந்தக்காரர்.
     கேர்பெட்டா என்றொரு மலைக் கிராமம். கோத்தகிரியின் அடர் சோலைகளின் அருகே உருவாக்கப் பட்ட குடியிருப்புப் பகுதி அது. அந்த ஊருக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள்.குடி தண்ணீர் அங்கு கிடையாது என்பதே காரணம். சோலைக்குள் எங்கோ கசிந்து கொண்டிருக்கும் சுனை நீரைத் தவிர வேறு நீராதாரம் கிடையாது.குடி தண்ணீருக்காக அந்தப் புதுப் பெண் 3 கி.மீ. கீழே குடத்துடன் நடந்து வந்து ,தண்ணீர் எடுத்து ,மேடேறி ..முடியாது. குடம் தூக்கியே அவள் காலியாகி விடுவாள்.
     ஆக , இதை  ஒரு சமூகப் பிரச்னையாகவே அவ்வூர் மக்கள் பார்த்துக்  கொண்டிருந்தார்கள் - சிலரைத் தவிர.அந்தச் சிலரில் ஒருவர்தான் நம் மாஸ்டர் . அருகில் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லாத இடத்தில் குடியிருப்பை அமைத்திருக்க மாட்டார்களே நம் முன்னோர்கள் என்று யோசித்தனர் . மாஸ்டரும் உடனிருந்தவர்களும் சோலைக்குள்  நடந்து சென்ற போது அங்கு ஒரு பகுதியில் நிலம் ஈரமாய் இருப்பதைக் கண்டனர்.
      தண்ணீர் இருக்கிறது.தேக்கி வைத்து அதை வெளிக் கொணர வேண்டும் .அதற்காக வனத் துறையின் உதவியோடு சோலைப் பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்தார்கள் . கடுமையான எதிர்ப்பு ஊர் மக்களில் பலரிடமிருந்து.ஏனென்றால் பெரிய சோலை என்று அழைக்கப் பட்ட அந்த இடம் அப்பகுதி மக்களின் இலவசக் கழிப்பறை.மதுவருந்திக் களிக்கும் விடுதி .எதிர்ப்புக்கு அஞ்சாமல் தாம் உருவாக்கிய பெரிய சோலைப் பாதுகாப்புக் குழுவின் பெருமுயற்சியால் அங்கு ஒரு சிற்றணை கட்டினர். மனிதப் புழக்கம் நீங்கி விட்ட நிலையில் காடு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது. நீர் ஊறி அணையில் நின்றது .தேங்கிய தண்ணீரைச் சிறு குழாய்கள் மூலம் கேர்பெட்டா கிராமத்திற்கு வழங்கினார்கள் .
      மனிதன் சம்பந்தப் பட்ட குடி நீர்ப் பிரச்னையைக் காடு தீர்த்து வைத்திருக்கிறது - பெண்கொடுக்க முடியாதிருந்த சமூகப் பிரச்னையையும் சேர்த்து . இப்படிப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும் .
      இதற்காகத் திட்டமிட்டுச் செயலாற்றியவர்களில் முக்கியமானவர்தான் ராஜு மாஸ்டர்.
       இன்றைக்கும் LONGWOOD SHOLA என்றழைக்கப் படும் பெரிய சோலை ,கானுயிர்களுக்குக் காப்பிடமாகவும் ,அருகில் உள்ள ஆறு மலைக் கிராமங்களுக்குக் குடிநீர்த் தொட்டியாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது.
       மனித நடமாட்டம் கண்டு ஒதுங்கி வேற்றிடங்களுக்குச் சென்று விட்ட விலங்குகளும் ,பறவைகளும் பெரிய சோலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.சோலையின் முகப்பில் , அங்கு வாழும் பறவைகள்,விலங்குகள் பற்றிய சரிபார்ப்புப் பட்டியல் வைக்கப் பட்டிருக்கிறது . சூழல் ஆய்வாளர்களுக்கும் ,ஆர்வலர்களுக்கும் ஒரு யாத்திரைத் தலம் போல இப்பகுதி இருந்து வருகிறது .
       வெற்றிக் கதையின் அங்கமாக விளங்கும் இந்த ஆசிரியப் பெருமகன் ,இன்றும் தன் பணி முடிந்து விட்டதாய் நினத்தாரில்லை.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்டப் பொறுப்பாளராக இருந்து ,ஊரெங்கும் உள்ள பள்ளி ,கல்லூரிகளில் மாணவர்களுக்குக் குறும்படங்கள் ,உரையாடல்கள் மூலமாகச் சுற்றுச் சூழல் பிரசாரத்தை   மேற்கொண்டு வருகிறார்.மாவட்டத்தின் சூழலிய முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
                                    LONGLIVE  LONGWOOD RAJU MASTER...

Friday, September 10, 2010

சாப்ளின் என்ற சர்வாதிகாரி .

   பேசாப் பொருளாய் இருந்த திரைப் படத்தைத் தனது அபூர்வ ஆற்றலால் பேச வைத்த திரை மேதை -சார்லி சாப்ளின் .
    மனிதம் அவரது மொழி .இரக்க சிந்தை ததும்பும் ஒரு வெகுளியாய்த் தெருக்களில் கோணல் நடை நடந்து ,வக்கற்றோர் வகையற்றோரிடத்தில் தன் அடையாளம் உணர்ந்து ,உதவி மகிழ்ந்த தனித்த வகை மாதிரியாய்த் திரை வலம் வந்தவர். 
      அளவிறந்த அன்பைத் தனது செய்தியாக்கியவர்.
      THE GREAT DICTATOR- அவரது திரைச் சாதனைகளில் ஒன்று.
      சம காலத்தில் வாழ்ந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரை ஊடக ஆயுதம் ஏந்தி எதிர்த்தவர்.திரைப் படைப்பாளிக்கு முதுகெலும்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்.
      முடி திருத்தும் கலைஞன் ஒருவன் ஆள் மாறாட்டம் காரணமாகச் சர்வாதிகாரியாக அறியப்பட்டு,அவன் வாய் மொழி வேதத்தைக் கேட்க இலட்சக் கணக்கில் கூடியிருந்த கூட்டத்தில் பேசுவதாய் அமைந்திருக்கும் காட்சியில் இந்த வசனங்கள் {சொற்பொழிவாய்} இடம் பெற்றிருந்தன. இன்றைய நடப்புகளோடு இதைத் தாராளமாய் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.


மன்னிக்கவும் .நான் சர்வாதிகாரி அல்லன்.எனது வேலையும் அதுவன்று.
எவரையும் ஆளவோ,தோற்கடிக்கவோ நான் விரும்பவில்லை.


யூதன்,கருப்பன்,வெள்ளையன் - என எல்லாருக்கும் உதவ வேண்டும் என்பதே என் விருப்பம். 

ஒருவருக்கொருவர் உதவவே விரும்புகிறோம் - நாம் மனிதர்களாய் இருப்பதால்.

மற்றவர்களுடன் மகிழ்சியுடன்தான் வாழ விரும்புகிறோம்..துன்பங்களோடு அல்ல.ஒருவரையொருவர் வெறுக்க நாம் விரும்புவதில்லை.


இந்த உலகம் வளமை மிகுந்தது . செல்வங்களை அள்ளித் தருவது.


நமது வாழ்வு சுதந்திரமானது ; அழகியது. ஆனால் நாம்தான் மெல்ல மெல்ல அதனை இழந்து வருகிறோம்.


பேராசை ,மனிதனின் ஆன்மாவுக்குள் நஞ்சாய்ப் புகுந்து விட்டது .

வெறுப்பை வளர வைத்து இரத்தச் சகதியில் தள்ளி விட்டது .


வேகமாய் வளர்ந்திருக்கிறோம் .மனக் கதவுகளையோ மூடிக் கொண்டிருக்கிறோம்.

எந்திரங்கள் நம் தேவைகளைப் பெருக்கி விட்டன .

அறிவு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது .ஆற்றலோ இறுகி மனிதத் தன்மையைக் குலைத்து விட்டது.


அதிகமாகச் சிந்திக்கிறோம். .குறைவாய்ப் பரிவு காட்டுகிறோம் .

எந்திரங்களை விட மனிதாபிமானமே இன்றையத் தேவை.


புத்திசாலித் தனத்தை விட அன்பும் ,கருணையும் உடனடியாகத் தேவை.


இவை இல்லாமற் போனால் ,வாழ்வு வன்முறை மயமாகி விடும்.


ஆகாய விமானங்களும்,வானொலியும் நம் உறவை நெருங்கச் செய்திருக்கின்றன.


இது போன்ற கண்டுபிடிப்புகள் மனிதனின் தேவை கருதி உருவானவை.; உலகளாவிய சகோதரத்துவத்தை ,ஒற்றுமையை வளர்ப்பவை.


இன்று என் குரல் ஏராளமான பேரைச் சென்றடைகிறது .

அவர்களெல்லாம் யார் ? வாழ்வில் நம்பிக்கை இழந்தோர், அச்சுறுத்தும் நடைமுறைகளால் பாதிப்படைந்தோர் ,சிறைப்பட்டோர் என்பவர்கள்தானே ? 

அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - நம்பிக்கை இழக்காதீர்கள் . 

துன்பம் நம் மீது படிந்துள்ள போதிலும் மனித குல உயர்வை விரும்பாத சிலரின் பேராசைதான் நம்மை ஆட்டிப் படைக்கிறது.


மனிதனின் வெறுப்பு மறைந்து போகும்.

சர்வாதிகாரிகள் இறந்து போவார்கள் .


இழந்த அதிகாரத்தை மக்களே மீளப் பெறுவார்கள் .

மனிதர்கள் அழிந்தாலும் விடுதலை வேட்கை அழியாதது .

எனதருமை வீரர்களே !

சுய சிந்தனை கொள்ளுங்கள். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுங்கள்

அதிகாரம் என்ற பெயரில் உங்களை அடிமை கொண்டவர்களை -இகழ்ந்து தூற்றியவர்களை -வேலையில் கசக்கிப் பிழிந்தவர்களை -ஆடு மாடுகளாய் நடத்தியவர்களை -வெறும் அம்புகளாய்ப் பயன்படுத்திக் கொண்டவர்களை எதிர்த்துக் குரல் கொடுங்கள் . 

அவர்களிடத்தில் உங்களை இழந்து விடாதீர்கள்.

ஏனென்றால் அவர்களின் இதயம் எந்திரத்தால் ஆனது ; அறிவு எந்திர மயமானது . 

நீங்கள் எந்திரங்கள் அல்லர்.கால்நடைகளும் அல்லர்.மனிதர்கள் நீங்கள்.மனிதத் தன்மை கொண்டவர்கள்.

வெறுப்பை உதறுங்கள்.

அன்பிலா இதயம்தான் வெறுப்பைச் சுமந்திருக்கும்.

போரை விடுதலைக்காக முன்னெடுங்கள் ; அடிமை கொள்வதற்காக அல்ல.

"கடவுளின் ராச்சியம் மனிதனுக்குள்'" என்கிறது விவிலியம் .

தனி மனிதர்கள் அல்ல.சமூக மனிதர்கள் நீங்கள்.


கருவிகளையும் மகிழ்ச்சியையும் கண்டுபிடிக்கும் ஆற்றல் உடையவர்கள்.


வாழ்வை இனிமையாக்கவும் ,அற்புதமாக்கவும் உங்களால் முடியும்.

குடிமக்கள் உரிமை என்ற பேரில் நாம் ஒன்றிணைவோம்.புத்துலகம் காணப் போராடுவோம். 

அந்த உலகம் உழைப்பை மதிக்கட்டும்.இளைய தலைமுறைக்கு நம்பிக்கையையும் ,மூத்தோருக்கு பாதுகாப்பையும் வழங்கட்டும். 

அதிகாரங்கள் இவற்றைத் தராது. சர்வாதிகாரம் அடிமையாக்குவதை மட்டுமே முதன்மைப் படுத்தும்.

நம்பிக்கைகளை விதைப்போம் நாம்.

நம்மைப் பிரித்திருக்கும் நாடு,பேராசை,வெறுப்பு,சகியாத் தன்மை என்ற தடைகள் அனைத்தையும் துறந்து பொருள் பொதிந்த உலகை உருவாக்குவோம்.

அறிவியலும்,முன்னேற்றமும்,நம்மை வழி நடத்தட்டும். 

படை வீரர்கள் ஜனநாயகத்தைக் காக்க முன்வரட்டும்.

ஒன்று படுவோம்.! 

நன்றி:

திரு.சக்திவேல் 
ஓவியர் .ஜீவா ,கோவை 




Wednesday, September 1, 2010

கடலோடி

     ..காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யாவின் "கடலோடி"யை அந்தக் காலத்தில் வாசிக்கவில்லை.இதனை வெளியிட்ட  வாசகர் வட்டத்தின் பிற நூல்களான லா.ச.ராவின் அபிதாவும் கு.ப.ராவின் சிறிது வெளிச்சமும் படர்த்திய ஈர்ப்பை இது ஏன் தரவில்லை?
     இது கதை அல்ல என்பதுதான் காரணம் .கடலில் மாலுமியாகப்  பணியாற்றிய ஒரு பொறியாளரின் அனுபவப் பதிவு என்பதைத் தனித் தகுதி என அறியாமல் இதனை எட்டத்தில் வைத்தே {நூலக அலமாரியில்}பார்த்திருந்தாயிற்று .
       அண்மையில் படித்து முடித்த போது பெரும் வியப்பு ஏற்பட்டது .ஒரு காலத்தில் கணையாழி வாசகர்கள் [தாள் மேல் தாள் போட்டுக் கொண்டு]  தமிழின் முக்கிய டாப் 10 படைப்புகளில் இதை  ஏன் சேர்த்தார்கள் என்பதும் புரிந்தது.
           "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
             வளி தொழிலாண்ட - கரிகால் வளவனைப் புறநானூறு  பாடியதை  + ௨வில் படித்த ஞாபகம் .கிரேக்கம் வரை விரிந்திருந்த  தமிழனின் வணிகப் பரப்பில் கடல் வாழ்வு முக்கியப் பங்காற்றியிருக்கிறது.செல்வம் தேடி வெளியூர் செல்வதைப்" பொருள் வயின்" என்று சொல்லியிருக்கிறார்கள்.கடல் வழி செல்வதால் ஏற்படும் பிரிவைக் "கலத்திற் பிரிவு"என அழைத்தார்கள். செல் என்ற சொல்லில் இருந்து செலவு உண்டாயிற்று.
           எமது இலங்கைச் செலவு -என்று திரு.வி.க ஒரு பயணக் கட்டுரை எழுதியிருக்கிறார்.வழிச் செலவுக்குக் காசு கொண்டு போதல் CREDIT CARD கலியில் காணாமற் போய்விட்டது.
            திரை கடலோடிய நரசய்யா செல்வம் சேர்த்திருக்கிறாரா எனத் தெரியாது.அரிதான அனுபங்களை ஈட்டியிருக்கிறார்.இது இ.பா. சொன்னது.
            உண்மைதான்.பயணக் கட்டுரை எழுதும் பெருமக்கள் வெளி நாட்டுப் பிரமுகர்களுடன் தேநீர் குடித்ததைப் பற்றி விலாவரியாக விவரித்திருப்பார்கள்.கண்டதை ,கேட்டதை வைத்து மூங்கில் முறத்திற்கு சாணிப்பத்து  வைத்துப் பொத்தி விடுவது போல ஒப்பேற்றியிருப்பதைத்தான் கண்டிருக்கிறோம்.அது இதில் இல்லை.
          பூனாவில் கடற்படைப் பொறியாளருக் கான பயிற்சியின்  நான்கு ஆண்டுக் கால வாழ்வில் ,இந்திய நாடு வாங்கிப் புதுப்பித்துப் பயன் படுத்திய வெளி நாட்டுக் கப்பல்களில் பணியாற்றியது ,இந்தோ -பாக் போரில் பங்கேற்பு  என்பது வரை விரித்துப் பொருளுரைத்திருக்கிறார்.
          தனது நினைவலைகளுடன் தான் சென்ற நாடுகளைப் பற்றிய விவரங்களையும் சேர்த்திருக்கிறார்.  குறிப்பாக கடல் மட்டத்துக்குக் கீழே உள்ள நெதர்லாந்து நாட்டின் மக்கள் 
கடல் நீர் ஊருக்குள் வராமல் தடுக்கக் காப்புச் சுவர் கட்டியிருப்பதையும்,நீரை மேலாண்மை செய்து வேளாண்மைக்குப் பயன்படுத்தும் சவால் நிறைந்த வேலையை நூற்றாண்டுகளாகச் செய்து வருவதையும் விதந்து கூறியிருக்கிறார்.
          ஆச்சரியம். TITANNIC  கப்பல் பற்றிய சிறு குறிப்பும் இந்நூலில் வருகிறது.
           கடைசி அத்தியாயம் குறிப்பிடத் தக்கது.சங்கப் பாடல்களில் கூறப்பட்டுள்ள கடல் வாழ்க்கை ,இந்திய அளவில் கப்பல்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை இதில் காணக் கிடைக்கின்றன.நூலாசிரியரின் விரிந்த மனம் இப்பகுதியில் புலப்படுகிறது.
           படிக்காதவர்கள் புதிதாய்ப் படிக்கலாம்.படித்தவர்கள் மீண்டும் படிக்கலாம்.
 கூடுதல் குறிப்புகள் :ஒன்று .....படிக்க நினைப்போருக்கு......
             .....மற்ற படி இங்கிலாந்தின் லண்டனோ ,மதுரை ஜில்லாவின் உசிலம்பட்டியோ எனக்கு ஒன்றுதான்.
            .....பார்ப்பதற்கு அழகாகவிருக்கும் இக்கப்பலின் முந்தைய கொள்கை "நாசமுறுவோம்;தோல்வியுறோம்"{ DELETA,NON DELECTA} என்பதாகும்.
           .....கப்பல் மிதக்க வேண்டும்.மிதக்கக் கப்பல் கூட்டின் ஒற்றுமை அவசியம்.மிதந்தால்தான் நகரும்.நகர்ந்தால்தான் போர் புரிய முடியும்.அதுதான் எல்லைக் காவலின் அடிப்படை. ம்..இப்போது {கப்பலைத் துடைப்பம் கொண்டு} பெருக்கு.பார்க்கலாம்.
           .....ஒரு மாலுமிக்கு , தான் இருக்கும் கப்பல்தான் தான் கண்ட கப்பல்களிலேயே மோசமானது.கடைசியாக அவன் இருந்த கப்பல்தான் சிறந்தது.
          ......யவனர்கள் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தை  laones  என்பதிலிருந்து திரிந்ததாகத் தெரிகிறது.இப்பதந்தான் கிரேக்கர்களைத் தமிழ் மொழியில் தெரியப் படுத்திற்று.
         ......மாலுமிகள் ஒரு நாட்டின் தூதுவர்கள்.கப்பல் இந்நாட்டின் கொடியைக் காட்ட மற்ற நாடுகளுக்குச் செல்கிறது.நீங்கள் சாதாரண மாலுமிகள் அல்ல.இந்தியாவின் பிரயாணத் தூதுவர்கள்.
         .....நான் எழுதுவது பயணக் கட்டுரை அல்ல.பிரயாணம் எனது பொழுதுபோக்கு அல்ல.அது எனது தொழில்.
 கூடுதல் குறிப்பு:இரண்டு     சூழலிய வாதிகளுக்கு ...
            துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது ஒரு சிகரெட் டின்னைச் சரியாகக் குறி பார்த்துச் சுட்டபோது அளவிலாப் பெருமையும் நிறைவும் அடைந்தவர் ,ஒரு கழுதைப் புலியை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்திய கூட்டத்தில் தானும் பங்கெடுத்துக் கொண்டதை வெட்கமாகக் கருதுகிறார்.
            ஆன்றோரே,சான்றோரே ,எம்மைப் போன்றோரே..!இதுதானே நம்ம செய்தி..