இனியதாய்
இருந்தது புளிய மரம்..
உச்சி மர அணில்
இறங்கி வரும்போது
பிடிக்கலாம் எனக் காத்திருந்தது
பள்ளிக் காலத்தில் ..
படிக்கிற பையன்கள்
ஊர் சுற்றித் திரிவது கண்டு
கோபமாய் ஓடி வந்த
சின்னம்மாவின் கையில்
புளிய விளார்.
தெருவின் மேற்புற
ரெட்டைப் புளியமரத்தில்
செருக்காய் வாழ்ந்திருந்த
பேய்கள்
ஒரு நற்காலையில்
ஓடிப் போயின -
கரண்ட் கம்பங்களில்
லைட் மாட்டிய பிறகு ..
ரயில் நிலையம் தாண்டிய
ஓடைக்கரையில்
வெங்கிச்சான் கல்லெடுத்து
வீசிய போது-
எப்போதாவது கிட்டின
புளியந் "தொவுருகள் "..
கூடியாடும்
"கொம்பேறி குழலேறிக்கு"த்
தோதான மரம்
கண்ணாடிக் காரர் தோப்பில்
தனியே நின்றது ..
பம்பரச் சாட்டை
தடிமனுள்ள வாதில்
இரு கை பற்றித்
தொங்கிக் களித்ததங்கே ..
அரை வட்ட வடிவங் கொண்ட
பிஞ்சைத் தேடி
ஊர்ந்து ஏறிடப்
பழக்கம் வந்தது..
கல்லால் கொட்டி
உப்புடன் சேர்த்து
அரைத்த விழுதை
முகங் கோணாமல்
விழுங்கத் தெரிந்தது..
லட்சுமி அக்கா கல்யாணத்தில்
நாயனம் வாசிக்க வந்த
கொண்டம்பட்டிக் காரரின்
வாசிப்பை வரவேற்கக் காத்திருந்தது
டவுசரில் மறைந்திருந்த
புளியங்காய்.
நொய்யல் ஆற்றின்
கசக் குழியில்
மாட்டிச்செத்தவன்
புளியமரத் தோட்ட
முருகேசன்.
ஓடிப் போன சிவகாமியின்
தேநீர்க் கடை
பேருந்து நிறுத்தப்
புளிய மரத்தடியில் .
இடுகாட்டுப் பேய் துரத்த
மரமெங்கும் ஆணிகள் .
மாசி பங்குனியில்
வீட்டின் முன்
விரித்த சாக்கில் காயும்
பழுப்பு நிறப் புளிக்கூட்டம்.
மரத்திற் பொறித்த
கரு நிற எண்களை
வரிசை மாறாமல்
எண்ணிடாமல் தீராது
பேருந்துப் பொழுதுகள் ..
நிழல் கொடுத்த மரங்கள்
சாலை விரிவாகிட
உயிர் கொடுத்து வீழ்வதைக்
காணச் சகிக்கவில்லை
புளிய மரங்களோடு வாழ்ந்தவனுக்கு..
=== ============ ===
.
.
.
.
.
No comments:
Post a Comment