Friday, September 24, 2010

பெரிய சோலை ராஜு மாஸ்டர்

       ராஜு மாஸ்டர் வந்திருந்தார் .கோத்தகிரிக்கு மாற்றலாகி வந்த செய்தி கேட்டதுமே அலுவலகத்திற்கு நேராக வந்து விட்டார். குன்னூர்  கார்டைட் பாக்டரி பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பணி அவருக்கு. மண்ணின் மைந்தர். எண்பதுகளின் தொடக்கத்தில் "மதுவின் தீமைகளுக்கு" எதிரான பிரசாரம் மேற்கொண்டவர் . ஊர்த் திருவிழாவைச் சிறப்பிக்க வரும்
விருந்தினர்களுக்காகவும் ,தமது உறவினர்களுக்காகவும் காவல் துறை அனுமதியுடன் லோக்கல் சரக்கு காய்ச்சி விளம்பி மகிழும் பாரம்பரியத்தில் வந்தவர் இவர் என்பதே இதில் ஆச்சரியம்.
      ஒரு வெற்றிக் கதையின் முக்கியப் பங்காளர் என்பதால் இங்கு கவனிக்கப்பட வேண்டியவராகிறார்.
      நீலகிரியின் எழிலார்ந்த சோலைக் காடுகளுக்கு அருகிலேயே மனிதக் குடியிருப்புகளும் இருப்பதைக் காணலாம். கால்நடை வளர்ப்பும் , சிறு விவசாயமும் இவர்களின் வாழ்வு முறை. வெள்ளைக்காரன் வந்து சோலைகளைத் "திருத்தி"த் தேயிலையும் ,காப்பியும் பயிரிட்டு எரியும் பனிக்காடுகளை - பச்சைப் பாலைகளை உருவாக்கிய பின்னரும் தம் வாழிடங்களை மலைகளை விட்டு மாற்றிக் கொள்ளாதவர்கள் இவர்கள்.
      ராஜு மாஸ்டர் பழங்குடி அல்லர்.ஆயினும் மலைச் சூழலில் தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மரபுக்குச் சொந்தக்காரர்.
     கேர்பெட்டா என்றொரு மலைக் கிராமம். கோத்தகிரியின் அடர் சோலைகளின் அருகே உருவாக்கப் பட்ட குடியிருப்புப் பகுதி அது. அந்த ஊருக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள்.குடி தண்ணீர் அங்கு கிடையாது என்பதே காரணம். சோலைக்குள் எங்கோ கசிந்து கொண்டிருக்கும் சுனை நீரைத் தவிர வேறு நீராதாரம் கிடையாது.குடி தண்ணீருக்காக அந்தப் புதுப் பெண் 3 கி.மீ. கீழே குடத்துடன் நடந்து வந்து ,தண்ணீர் எடுத்து ,மேடேறி ..முடியாது. குடம் தூக்கியே அவள் காலியாகி விடுவாள்.
     ஆக , இதை  ஒரு சமூகப் பிரச்னையாகவே அவ்வூர் மக்கள் பார்த்துக்  கொண்டிருந்தார்கள் - சிலரைத் தவிர.அந்தச் சிலரில் ஒருவர்தான் நம் மாஸ்டர் . அருகில் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லாத இடத்தில் குடியிருப்பை அமைத்திருக்க மாட்டார்களே நம் முன்னோர்கள் என்று யோசித்தனர் . மாஸ்டரும் உடனிருந்தவர்களும் சோலைக்குள்  நடந்து சென்ற போது அங்கு ஒரு பகுதியில் நிலம் ஈரமாய் இருப்பதைக் கண்டனர்.
      தண்ணீர் இருக்கிறது.தேக்கி வைத்து அதை வெளிக் கொணர வேண்டும் .அதற்காக வனத் துறையின் உதவியோடு சோலைப் பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்தார்கள் . கடுமையான எதிர்ப்பு ஊர் மக்களில் பலரிடமிருந்து.ஏனென்றால் பெரிய சோலை என்று அழைக்கப் பட்ட அந்த இடம் அப்பகுதி மக்களின் இலவசக் கழிப்பறை.மதுவருந்திக் களிக்கும் விடுதி .எதிர்ப்புக்கு அஞ்சாமல் தாம் உருவாக்கிய பெரிய சோலைப் பாதுகாப்புக் குழுவின் பெருமுயற்சியால் அங்கு ஒரு சிற்றணை கட்டினர். மனிதப் புழக்கம் நீங்கி விட்ட நிலையில் காடு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது. நீர் ஊறி அணையில் நின்றது .தேங்கிய தண்ணீரைச் சிறு குழாய்கள் மூலம் கேர்பெட்டா கிராமத்திற்கு வழங்கினார்கள் .
      மனிதன் சம்பந்தப் பட்ட குடி நீர்ப் பிரச்னையைக் காடு தீர்த்து வைத்திருக்கிறது - பெண்கொடுக்க முடியாதிருந்த சமூகப் பிரச்னையையும் சேர்த்து . இப்படிப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும் .
      இதற்காகத் திட்டமிட்டுச் செயலாற்றியவர்களில் முக்கியமானவர்தான் ராஜு மாஸ்டர்.
       இன்றைக்கும் LONGWOOD SHOLA என்றழைக்கப் படும் பெரிய சோலை ,கானுயிர்களுக்குக் காப்பிடமாகவும் ,அருகில் உள்ள ஆறு மலைக் கிராமங்களுக்குக் குடிநீர்த் தொட்டியாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது.
       மனித நடமாட்டம் கண்டு ஒதுங்கி வேற்றிடங்களுக்குச் சென்று விட்ட விலங்குகளும் ,பறவைகளும் பெரிய சோலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.சோலையின் முகப்பில் , அங்கு வாழும் பறவைகள்,விலங்குகள் பற்றிய சரிபார்ப்புப் பட்டியல் வைக்கப் பட்டிருக்கிறது . சூழல் ஆய்வாளர்களுக்கும் ,ஆர்வலர்களுக்கும் ஒரு யாத்திரைத் தலம் போல இப்பகுதி இருந்து வருகிறது .
       வெற்றிக் கதையின் அங்கமாக விளங்கும் இந்த ஆசிரியப் பெருமகன் ,இன்றும் தன் பணி முடிந்து விட்டதாய் நினத்தாரில்லை.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்டப் பொறுப்பாளராக இருந்து ,ஊரெங்கும் உள்ள பள்ளி ,கல்லூரிகளில் மாணவர்களுக்குக் குறும்படங்கள் ,உரையாடல்கள் மூலமாகச் சுற்றுச் சூழல் பிரசாரத்தை   மேற்கொண்டு வருகிறார்.மாவட்டத்தின் சூழலிய முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
                                    LONGLIVE  LONGWOOD RAJU MASTER...

1 comment:

  1. ராஜு மாஸ்டர் குறித்த அறிமுகம் அற்புதம். நமக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது அவரைப் பற்றிய தகவல்கள். முடியாதது என்று இந்த அவணியிலே எதுவுமே இல்லை என்பதற்கு வாழும் உதாரணம் அவர்.

    ராஜு மாஸ்டர் போன்று ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும்.

    அவையுடன் சேர்ந்து நானும் அவரை வாழ்த்துகிறேன். வாழ்க ராஜு மாஸ்டர் பன்னெடுங்காலம்.

    ReplyDelete